குடியாத்தத்தில் கஞ்சா பயன்படுத்திய 8 மாணவர்கள் பிடிபட்டனர்


குடியாத்தத்தில் கஞ்சா பயன்படுத்திய 8 மாணவர்கள் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 24 Sept 2021 11:20 PM IST (Updated: 24 Sept 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தில் கஞ்சா பயன்படுத்திய 8 கல்லூரி மாணவர்கள் பிடிபட்டனர். அவர்களுக்கு போலீசார் கவுன்சிலிங் அளித்தனர்.

குடியாத்தம்

குடியாத்தத்தில் கஞ்சா பயன்படுத்திய 8 கல்லூரி மாணவர்கள் பிடிபட்டனர். அவர்களுக்கு போலீசார் கவுன்சிலிங் அளித்தனர்.

கஞ்சா கடத்தல்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரத்திற்கு சில கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநில எல்லை உள்ளது. இதனால் ஆந்திர மாநிலத்திலிருந்து குடியாத்தம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாகவும், இதனால் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி பாதிக்கப்படுவதாகவும் தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

எனவே குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு வெளியூரிலிருந்து கஞ்சா கொண்டு வருபவர்கள், விற்பவர்கள், அவர்களுக்கு உதவி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேலூர் சரக டி.ஐ.ஜி. ஏ.ஜி.பாபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டனர்.

8 மாணவர்கள் பிடிபட்டனர்

இதனைத்தொடர்ந்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில், சப்&இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி, முருகன் மற்றும் போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து கடந்த சில தினங்களாக தீவிர கஞ்சா விற்பனை தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த சில தினங்களில் கஞ்சா விற்பனை செய்து வந்த மின்வாரிய ஊழியர் உள்பட 10&க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கஞ்சா விற்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குமாறு வேலூர் சரக டி.ஐ.ஜி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் குடியாத்தம் போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்பேரில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று குடியாத்தம் அருகே உள்ள ஒரு பகுதியில் கஞ்சா புகைத்து கொண்டிருந்த 8 தனியார் பாலிடெக்னிக் மாணவர்களை மடக்கிப்பிடித்தனர். அவர்கள் அனைவரும் கஞ்சா புகைத்து கொண்டும் கையில் சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்துக் கொண்டும் இருந்தனர்.
 
கவுன்சிலிங்

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அந்த மாணவர்களின் பெற்றோர்கள், பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்த அந்த மாணவர்களின் பெற்றோர்கள், பாலிடெக்னிக் கல்லூரி துறைத்தலைவர்கள் ஆகியோர் முன்னிலையில் அந்த மாணவர்களுக்கு போலீசார் கவுன்சிலிங் தந்தனர். அப்போது இனி கஞ்சா பயன்படுத்தமாட்டோம் என அந்த மாணவர்கள் உறுதி அளித்தனர். 
மேலும் இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story