கல்லல் வாரச்சந்தையை அரசு இடத்தில் நடத்த வேண்டும்


கல்லல் வாரச்சந்தையை அரசு இடத்தில் நடத்த வேண்டும்
x
தினத்தந்தி 25 Sept 2021 12:04 AM IST (Updated: 25 Sept 2021 12:04 AM IST)
t-max-icont-min-icon

கல்லல் பகுதியில் நடைபெறும் வாரச்சந்தையை அரசிற்கு சொந்தமான இடத்தில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லல் யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.



கல்லல்,

கல்லல் பகுதியில் நடைபெறும் வாரச்சந்தையை அரசிற்கு சொந்தமான இடத்தில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லல் யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கவுன்சிலர்கள் கூட்டம்

கல்லல் யூனியன் ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவர் சொர்ணம் அசோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆணையாளர்கள் சங்கரபரமேஸ்வரி, அழகுமீனாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்துகொண்ட கவுன்சிலர்களின் விவாதம் வருமாறு&
சங்கு.உதயகுமார் (வி.சி.க)  ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள், அலுவலர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் அதே இடத்தில் பணியாற்றினால் பல்வேறு முறைகேடு நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களை வேறு இடத்திற்கு பணிமாற்றம் செய்ய வேண்டும்.  மருங்கிப்பட்டியில் புதிய ரேஷன் கடை கட்ட வேண்டும்.
நாராயணன் (துணைத்தலைவர்)  கொங்கரத்திற்கு செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைத்து  தரவேண்டும்.
அழகப்பன் (காங்கிரஸ்) கல்லல் யூனியன் அலுவலகத்திற்கு முன்புறத்தில் உள்ள மிகவும் பழுதான நிலையில் உள்ள கட்டிடத்தை அப்புறப்படுத்த வேண்டும். யூனியன் அலுவலகம் முன்பு கார்கள், மோட்டார் சைக்கிள் நிறுத்துவதற்கு தனித்தனியாக இடம் அமைக்க வேண்டும்.

வாரச்சந்தை

சங்கீதாமுருகேசன் (அ.தி.மு.க)  கல்லலை தனித்தாலுவாக மாற்ற வேண்டும். கல்லலில் நடைபெற்று வரும் வாரச் சந்தையை தனியார் இடத்தில் நடத்தாமல் அரசிற்கு சொந்தமான இடத்தில் நடத்த வேண்டும். மழைக்காலங்களில் கல்லல் பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்பதற்கு கூட இடம் இல்லை. எனவே புதிய பஸ் நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சங்கரபரமேஸ்வரி (ஆணையாளர்) கல்லல் பஸ் நிலையம் குறித்து வழக்கு இருப்பதால் தற்போது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. அந்த வழக்கு முடிந்த பின்னர் தான் நடவடிக்கை எடுக்க முடியும். அரசு இடத்தில் புதிய சந்தை கட்டுவதற்காக புதிய இடம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மினி கிளினிக்
சைய்யது அபுதாகீர் (அ.தி.மு.க)  ஆத்தங்குடி பகுதியில் அம்மா மினி கிளினிக் அமைக்கப்பட்டு அங்கு வரும் மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரம் வரை தான் உள்ளனர். மற்ற நேரங்களில் இருப்பதில்லை. எனவே இந்த கிளினிக்கில் அனைத்து நேரங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் இருந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சொர்ணம் அசோகன் (தலைவர்) ஆத்தங்குடி பகுதியில் உள்ள கிளினிக் என்பது பகுதி நேரமாக தான் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா காலமாக உள்ளதால் மருத்துவர்கள் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறையினர் கொரோனாவை கட்டுப்படுத்தும் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். இதுதவிர பொதுமக்களிடம் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வருங்காலங்களில் இந்த கிளினிக் தரம் உயர்த்த அரசிடம் கோரிக்கை விடுத்து நடவடிக்கை மேற்கொள்வோம்.
 பின்னர் அனைத்து கவுன்சிலர்களின் தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் முடிவில் துணைத்தலைவர் நாராயணன் நன்றி கூறினார்.

Next Story