இலவச பட்டா வழங்கிய இடத்தை ஒதுக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்
குமரலிங்கத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிய இடத்தை ஒதுக்கித் தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
போடிப்பட்டி, செப்.25-
குமரலிங்கத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிய இடத்தை ஒதுக்கித் தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இலவச பட்டா
குமரலிங்கம் பகுதியிலுள்ள வீடில்லாத 90 ஏழை குடும்பங்களுக்கு கடந்த 2017 ம் ஆண்டு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.ஆனால் இதுவரை அவர்களிடம் அந்த இடம் ஒப்படைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து பட்டா வழங்கப்பட்ட இடத்தில் நேற்று பெண்கள் உட்பட ஏராளமானோர் கூடினர். மேலும் அந்த இடத்தில் குடிசை அமைக்க முயற்சி செய்ததுடன் அந்த இடத்தில் காலை முதல் மாலை வரை அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்துக்கு வராததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் குமரலிங்கம் பஸ் நிலையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
சாலை மறியல் முயற்சி
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:- கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் 90 குடும்பங்களுக்கு இந்த இடத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.ஆனால் அந்த இடத்தை இதுவரை எங்களிடம் ஒப்படைக்கவில்லை. இதில் அனைவரும் ஏழை தொழிலாளர்களாகும். தற்போதைய சூழலில் வீட்டு வாடகை கூட கட்ட முடியாமல் தவித்து வருகிறோம். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் அந்த இடத்தில் உங்களுக்கு பட்டா வழங்கப்பட்டு விட்டது, போய் வீடு கட்டிக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் இங்கு வந்தால் அந்த பூமியில் விவசாயம் செய்து வருபவர்கள் அந்த இடத்தில் நுழைய அனுமதி மறுக்கிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இதனால் எங்களுக்கு இந்த இடத்தைக் கைப்பற்றி ஒதுக்கீடு செய்து தர வேண்டும். அல்லது மாற்று இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலையிலிருந்து சாப்பாடு கூட இல்லாமல் இங்கே போராடி வருகிறோம். ஆனால் எந்த அதிகாரியும் வந்து ஏன் என்று கேட்கவில்லை.எனவே சாலை மறியலில் ஈடுபட முயன்றோம். எங்களுக்கு உடனடியாக பட்டா இடத்தை ஒதுக்கித் தரவில்லையென்றால் 90 குடும்பத்தினரும் இதே இடத்தில் தீக்குளிக்க தயாராக உள்ளோம்'.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story