வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் பொதுமக்கள் அவதி
திருப்பூர் பெரியார் காலனியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதுதொடர்பாக சுப்பராயன் எம்.பி.யிடம் பெண்கள் முறையிட்டனர்.
அனுப்பர்பாளையம்
திருப்பூர் பெரியார் காலனியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதுதொடர்பாக சுப்பராயன் எம்.பி.யிடம் பெண்கள் முறையிட்டனர்.
வீடுகளுக்குள் மழைநீர்
திருப்பூர் பெரியார்காலனி ஏ.வி.பி. ஜே.எஸ். கார்டனில் 100&க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கிருந்து மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியேறுவதற்கு போதுமான வடிகால் வசதி உள்ளது. ஆனால் மழைகாலங்களில் சாமுண்டிபுரம், வலையங்காடு, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் அப்பகுதியில் உள்ள ஓடை வழியாக சென்று நல்லாற்றில் கலப்பது வழக்கம். ஆனால் 15 அடி கொண்ட ஓடை ஆக்கிரமிக்கப்பட்டு, மழைநீர் எளிதாக வெளியேற முடியாததால் ஓடை நிரம்பி ஏ.வி.பி. ஜே.எஸ்.கார்டனுக்குள் புகுந்து விடுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் பெய்த மழை காரணமாக ஏ.வி.பி. ஜே.எஸ்.கார்டனில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சில வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டியில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்தது. அந்த பகுதியில் முழங்கால் அளவிற்கு மழைநீர் சூழ்ந்ததால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தண்ணீரில் மூழ்கின.
பொதுமக்கள் முறையீடு
இந்த பிரச்சினை தொடர்பாக அறிந்ததும் திருப்பூர் சுப்பராயன் எம்.பி. நேற்று மதியம் ஏ.வி.பி. ஜே.எஸ்.கார்டன் பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு வசிக்கும் பெண்கள் இது தொடர்பாக அவரிடம் முறையிட்டனர். அப்போது மழை பெய்யும் போதெல்லாம் இதே பிரச்சினை ஏற்படுவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் மழைநீர் எளிதாக வெளியேறும் வகையில் திட்டத்தை தயார் செய்யுமாறு 1&வது மண்டல உதவி கமிஷனர் சுப்பிரமணியம், உதவி பொறியாளர் ராம்மோகன் ஆகியோருக்கு சுப்பராயன் எம்.பி. உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் எம்.பி. உறுதியளித்தார். இந்த ஆய்வின்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் கவுன்சிலர் செல்வராஜ், தி.மு.க. முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தம்பண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story