மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை
நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
தஞ்சாவூர்:
நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
நடத்தையில் சந்தேகம்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே மஞ்சள்வயல் தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது 59). கொத்தனார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி(47). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பாலசுப்பிரமணியனுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் அவர், அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்ததுடன் அவரை அடித்து துன்புறுத்தி வந்தார். கடந்த 2017&ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8&ந் தேதி இரவு மனைவியிடம் பாலசுப்பிரமணியன் தகராறு செய்தார். அப்போது அவரை அடித்து விட்டு, வீட்டில் இருந்து வெளியில் சென்று விட்டார். பின்னர் நீண்டநேரம் கழித்து நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டிற்கு வந்தார். வீடு பூட்டி கிடந்ததால் கதவை தட்டியபோது அவருடைய மகள் ஜமுனாராணி எழுந்து வந்து கதவை திறந்தார்.
தலையில் கல்லைப்போட்டு கொலை
வீட்டிற்குள் சென்ற பாலசுப்பிரமணியன் அங்கு தூங்கி கொண்டிருந்த மனைவி ராஜேஸ்வரியை பார்த்தவுடன் மிகுந்த ஆத்திரம் அடைந்தார். உடனே அவரை பார்த்து தகாத வார்த்தையால் திட்டியதுடன் வீட்டு கதவின் அருகே கிடந்த கருங்கல்லை எடுத்து ராஜேஸ்வரியின் தலையில் போட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜமுனாராணி சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். உடனே உயிருக்கு போராடி கொண்டிருந்த ராஜேஸ்வரியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
ஆயுள் தண்டனை
இது குறித்து அதிராம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் தஞ்சை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி இந்திராணி நேற்று தீர்ப்பு கூறினார்.
அவர் தனது தீர்ப்பில் மனைவியை கொன்ற பாலசுப்பிரமணியனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
Related Tags :
Next Story