எடப்பாடி பழனிசாமி வரவேற்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வினர் திடீர் மோதல்
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விருதுநகர்,
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வரவேற்பு நிகழ்ச்சி
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள செல்வதற்காக விமானத்தில் மதுரை வந்தார்.
அவருக்கு மதுரை விமான நிலையத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களும், எம்.எல்.ஏ.க்களுமான செல்லூர் ராஜூ, ராஜன்செல்லப்பா ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கப்பலூர் சுங்கச்சாவடி அருகே நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர், ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அங்குள்ள ஓட்டலில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.ம.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான பொய்கை மாரியப்பன், அவை தலைவர் பெருமையா பாண்டியன், வர்த்தக அணி செயலாளர் பொன்னுச்சாமி, கடையநல்லூர் நகர செயலாளர் கமாலுதீன், செங்கோட்டை நகர செயலாளர் ராமசாமி ஆகியோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி, அனைவரும் ஒன்றாக இணைந்து கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். நீங்கள் மீண்டும் கட்சியில் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
பின்னர் அவர் நெல்லை செல்லும் வழியில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வந்தார். அங்கு வெங்கடாசலபுரம் நான்கு வழிச்சாலையில் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, அ.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஆகியோரும் வந்திருந்தனர். வரவேற்பு நிகழ்ச்சிக்குப்பின் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டு சென்றார்.
அதன்பின் ராமலிங்கபுரம் கிளை செயலாளர் வீராவுரெட்டி, ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கோஷமிட்டதாக கூறப்படுகிறது.
15 பேர் மீது வழக்கு
தொடர்ந்து பின்னால் காரில் வந்த சிலர் வீராவுரெட்டியையும், அங்கிருந்த வேறு சில அ.தி.மு.க. நிர்வாகிகளையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்களும் தாக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. இதையடுத்து போலீசார் தலையிட்டு அனைவரையும் கலைந்து போகச்செய்தனர்.
அ.தி.மு.க. நிர்வாகி வீராவுரெட்டி இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அ.தி.மு.க. நிர்வாகிகள் ராசு, பாண்டியராஜன், அரிகரசுதன், மாரிக்கனி, மணி உள்பட மேலும் சிலர் மீது சாத்தூர் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ராஜேந்திர பாலாஜி உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோன்று சாத்தூர் நகர செயலாளர் இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, அவரது சகோதரர் ரமேஷ், ராஜ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேர் மீதும் சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் சாத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story