கர்நாடக சட்டசபையின் கூட்டுக்கூட்டத்தில் நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா உரை
கர்நாடக சட்டசபையின் கூட்டுக்கூட்டத்தில் நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா உரையாற்றினார். அப்போது புதிய சட்டங்கள் பற்றி போதிய அளவு விவாதங்கள் நடைபெறுவது இல்லை என கவலை தெரிவித்தார். இந்த கூட்டுக்கூட்டத்தை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது.
பெங்களூரு: கர்நாடக சட்டசபையின் கூட்டுக்கூட்டத்தில் நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா உரையாற்றினார். அப்போது புதிய சட்டங்கள் பற்றி போதிய அளவு விவாதங்கள் நடைபெறுவது இல்லை என கவலை தெரிவித்தார். இந்த கூட்டுக்கூட்டத்தை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது.
அற்புதமான வரலாறு
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி பவள விழா கொண்டாடப்படுகிறது.இதையொட்டி பெங்களூரு விதான சவுதாவில் நேற்று கர்நாடக சட்டசபையின் கூட்டுக்கூட்டத்தில் மக்களவை சபாநாயகர் சட்டசபையின் மாண்புகள் குறித்து உரையாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் 2.30 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
இந்த விதான சவுதா கட்டிடம், ஜனநாயகத்தை வெளிப்படுத்தும் அடையாளமாக திகழ்கிறது. இது மக்களின் விருப்பங்களை பறைசாற்றுவதாக உள்ளது. இந்த கட்டிடத்தை காண வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு, ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. கர்நாடகம் அற்புதமான வரலாற்றை கொண்டுள்ளது.
ஜனநாயக மாண்புகள்
12-வது நூற்றாண்டில் பசவண்ணர் அனுபவ மண்டபத்தை உருவாக்கினார். அது தற்போது உள்ள நாடாளுமன்றத்தின் பிரதிபலிப்பு ஆகும். இந்த 75 ஆண்டுகளில், நாம் பின்பற்றி வரும் நாடாளுமன்றம் மூலமான நிர்வாகம், ஜனநாயக மாண்புகளை காப்பாற்றுவதிலும், ஜனநாயக அமைப்புகளின் பொறுப்புகளை மேலும் உயர்த்துவதிலும் நாம் எந்த அளவுக்கு வெற்றி கண்டுள்ளோம் என்பது குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம்.
நாடாளுமன்ற ஜனநாயகம் தான் சிறப்பான ஆட்சி நிர்வாக முறை என்பது அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. நாம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை பலப்படுத்தியுள்ளோம். ஆட்சி நிர்வாகத்தின் பல்வேறு நிலைகளில் நாம் வளர்ச்சி கண்டுள்ளோம். மக்களை மையமாக கொண்டது தான் நமது ஜனநாயக முறை. இதன் காரணமாக தான் நாட்டில் இதுவரை 17 முறை நாடாளுமன்ற தேர்தலும், 300 முறை சட்டசபை தேர்தல்களும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.
மக்களின் நலன்கள்
தேர்தலுக்கு பிறகு ஆட்சி அதிகாரம் ஒப்படைப்பு மிக எளிமையாக நடக்கிறது. இது நமது ஜனநாயகம் மீதான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு சட்டங்கள் இயற்றப்படுகின்றன. ஜனநாயக அமைப்புகளை இன்னும் சிறப்பான முறையில் மக்களுக்கு சேவையாற்றும் வகையில் மாற்றுவது எப்படி என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.
நாடாளுமன்றம், சட்டசபைகள் ஜனநாயகத்தின் ஆத்மா. நாட்டிற்காக கொள்கைகள், சட்டங்களை இயற்றும் பொறுப்பு அவற்றின் மீது உள்ளது. சட்டசபையில் பொதுமக்களின் பிரச்சினைகளை மிகுந்த பொறுப்புடன் விவாதித்து அவற்றுக்கு தீர்வு காண வேண்டும். நாடாளுமன்ற, சட்டசபைகளின் உறுப்பினர்கள் தங்களின் கடமையை நிறைவேற்ற ஜனநாயக தத்துவங்கள், மாண்புகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும்.
தேவையான விவாதங்கள்
ஆட்சி நிர்வாகத்தின் மூன்று பகுதிகளான சட்டசபை, நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றின் அதிகாரங்கள் என்ன என்பது குறித்து அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் முக்கியமானது சட்டசபை. இது மக்களின் விருப்பங்களுக்கு சட்ட வடிவத்தை கொடுக்கிறது. புதிய சட்டங்கள் இயற்றப்படும்போது அதுபற்றி விரிவாக விவாதம் நடைபெற வேண்டும். ஆனால் தேவையான அளவுக்கு விவாதங்கள் நடைபெறாதது கவலை அளிப்பதாக உள்ளது.
நாடாளுமன்றம், சட்டசபைகளின் நேரம் மதிப்பு மிக்கது. இதை நாம் எக்காரணம் கொண்டும் விரயமாக்க கூடாது. சபையில் உறுப்பினர்கள் ஒழுக்கமாகவும், விதிமுறைகளை பின்பற்றியும் நடந்து கொண்டு சபையின் கண்ணியத்தை காக்க வேண்டும். சபையில் ரகளை நடைபெறுவதால், பொதுமக்களின் பிரச்சினைகளை விவாதிக்கும் வாய்ப்பு பறிபோகிறது. இதனால் முக்கியமான மசோதாக்கள் மீது விவாதம் நடத்துவது கஷ்டமாகிறது.
புதிய இந்தியா
சபையில் அரசின் முடிவுகளுக்கு எதிரான கருத்துகள் இருக்கக்கூடாது என்பது அல்ல. எதிர்ப்பு, கருத்து வேற்றுமை, மாற்று கருத்து, வாதங்கள்-விவாதங்கள் நடைபெறுவது ஜனநாயகத்தில் இருக்க வேண்டிய விஷயங்கள் தான். இந்த குண நலன்கள் தான் நமது ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்துகிறது. ஆனால் தர்ணா போராட்டங்கள் சபை விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவது அவசியம். நாடு சுதந்திரம் அடைந்து பவள விழா கொண்டாடும் இந்த நேரத்தில் புதிய இந்தியாவை உருவாக்கும் விஷயத்தில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க விரும்புகிறார்கள். அர்த்தப்பூர்வமான விவாதங்கள் மூலம் மக்களின் விருப்பங்களை நாம் நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் உலக நாடுகளுக்கு நாம் ஜனநாயகம் குறித்து வழிகாட்ட முடியும்.
இவ்வாறு ஓம்பிர்லா பேசினார்.
இந்த கூட்டத்தில் சபாநாயகர் காகேரி, மேல்&சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி உள்பட பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டுக் கூட்டத்தை காங்கிரஸ் புறக்கணித்துவிட்டது. இதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமரும் இருக்கைகள் காலியாக இருந்தன.
கன்னடத்தில் பேச வலியுறுத்தல்
மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, இந்தியில் பேசினார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர் அன்னதானி, கையில் கன்னட கொடியை தூக்கி பிடித்தபடி, இது கர்நாடகம், கன்னடத்தில் பேச வேண்டும் என்று குரலை உயர்த்தி பேசினார். இதனால் சபையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. அவர் ஒரு நிமிடம் நின்றபடி இதை கூறினார். பிறகு இருக்கையில் அமர்ந்தார். அவர் எழுந்து நின்று இந்தியில் பேச ஆட்சேபனை தெரிவித்தபோதும், ஓம்பிர்லா தொடர்ந்து பேசினார்.
Related Tags :
Next Story