வெடி விபத்தில் படுகாயமடைந்த தமிழக வியாபாரி சாவு


வெடி விபத்தில் படுகாயமடைந்த தமிழக வியாபாரி சாவு
x
தினத்தந்தி 25 Sept 2021 2:25 AM IST (Updated: 25 Sept 2021 2:25 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் பட்டாசு வெடித்து சிதறியதில் படுகாயம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த வியாபாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். குடோனில் சட்டவிரோதமாக பட்டாசுகள் வைத்திருந்ததால் இந்த விபரீதம் நடந்துள்ளது.

பெங்களூரு:பெங்களூருவில் பட்டாசு வெடித்து சிதறியதில் படுகாயம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த வியாபாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். குடோனில் சட்டவிரோதமாக பட்டாசுகள் வைத்திருந்ததால் இந்த விபரீதம் நடந்துள்ளது.

2 பேர் சாவு

பெங்களூரு வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நியூ தரகுபேட்டை, ராயன் சர்க்கிள் அருகே கணேஷ் பாபு என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. லாரி டிரான்ஸ்போர்ட் பெயரில், அங்கு பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மதியம் பட்டாசு பெட்டிகளை எடுக்க சென்ற போது, வெடி விபத்து நடந்திருந்தது.

இந்த சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த மனோகர், நியூ தரகு பேட்டையை சேர்ந்தவரும், குடோன் அருகே பஞ்சர் கடை நடத்தி வந்தவருமான அஸ்லாம் பாஷா ஆகிய 2 பேரும் உடல் சிதறி பலியாகி இருந்தார்கள். இந்த சம்பவத்தில் அங்குசாமி, மஞ்சுநாத், ஜேம்ஸ் மற்றும் கணபதி ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வியாபாரி சாவு

இந்த நிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த அங்குசாமி (வயது 75) நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார். அவர் தனது குடும்பத்துடன் லால்பாக் அருகே தொட்ட மாவள்ளி பகுதியில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது. அங்குசாமியின் பூர்வீகம் தமிழ்நாடு ஆகும். அவர் கடந்த பல ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வருகிறார். கலாசி பாளையா மெயின் ரோட்டில் ஸ்ரீ ராகவேந்திரா டயர் கடையை அங்குசாமி நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், போலீசார் நடத்திய விசாரணையில், குடோன் உரிமையாளரான கணேஷ் பாபு தமிழ்நாடு சிவகாசியில் இருந்து மொத்தமாக பட்டாசுகளை வாங்கி வந்து, பெங்களூருவில் உள்ள பல்வேறு கடைகளில் விற்று வந்துள்ளார்.
இவ்வாறு சிவகாசியில் இருந்து வரும் பட்டாசு பெட்டிகளை தன்னுடைய குடோனில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தார். சட்ட விரோதமாகவும், முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாமலும் குடோனில் பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்ததே இந்த விபரீதம் நடந்து 3 பேர் பலியாக நேரிட்டது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

தீவிர விசாரணை

இதற்கிடையில், இச்சம்பவம் குறித்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் கைதான குடோன் உரிமையாளர் கணேஷ் பாபுவிடமும் வி.வி.புரம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர். மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஜேம்ஸ், மஞ்சுநாத், கணபதியிடமும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்துள்ளனர்.

மேலும் 10 பட்டாசு பெட்டிகள் வெடித்தது

பட்டாசு வெடிவிபத்தில் கணபதி என்பவர் காயம் அடைந்து விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் நேற்று போலீசார் விசாரித்திருந்தனர். அப்போது அவர், அவென்யூ ரோட்டில் உள்ள கண்ணன் என்பவரின் கடைக்கு விற்பனைக்காக பட்டாசு பெட்டிகளை எடுக்க தள்ளுவண்டியை எடுத்து வந்திருந்ததாகவும், தள்ளுவண்டியில் 10 பெட்டிகள் ஏற்றப்பட்டு இருந்ததாகவும், அப்போது சில பட்டாசு பெட்டிகள் கீழே விழுந்ததால் 10 பட்டாசு பெட்டிகளும் வெடித்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 

இதன் மூலம் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகளில் இருந்த பட்டாசுகள் வெடித்ததால் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே விரைவில் தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகள் வர உள்ளதால் பட்டாசு விற்பனை, தமிழகத்தில் இருந்து வரும் பட்டாசுகளை கண்காணிக்கவும், அவை பாதுகாப்பாக வைக்கப்படுவது குறித்தும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story