ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பி ஓட்டம் - 3 மணி நேரத்தில் மடக்கி பிடித்த போலீசார்


ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பி ஓட்டம் - 3 மணி நேரத்தில் மடக்கி பிடித்த போலீசார்
x
தினத்தந்தி 25 Sept 2021 5:53 PM IST (Updated: 25 Sept 2021 5:53 PM IST)
t-max-icont-min-icon

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த கைதி நைசாக தப்பி ஓடிவிட்டார். அவரை தனிப்படை போலீசார் 3 மணிநேரத்தில் மடக்கி பிடித்தனர்.

பெரம்பூர்,

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சபி என்ற சபிமுகமது (வயது 21). திருட்டு வழக்கில் சபி முகமதுவை புளியந்தோப்பு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட சபி முகமதுவை சிகிச்சைக்காக கடந்த 22-ந்தேதி ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு புழல் சிறை போலீசார் அழைத்து வந்தனர்.

பின்னர் அங்கு உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியின் 4-வது மாடியில் சிறை கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இங்கு பாதுகாப்பு பணிக் காக ஆயுதப்படை போலீசார் 16 பேர் “ஷிப்டு” முறையில் பணியாற்றி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மதியம் சபி முகமதுவை போலீசார் பரிசோதனைக்காக அழைத்துச்சென்றனர். பரிசோதனை முடிந்து மீண்டும் வார்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது அவர், கழிவறைக்கு சென்றுவிட்டு வருவதாக போலீசாரிடம் கூறிவிட்டு சென்றார்.

ஆனால் கழிவறைக்கு சென்ற சபி முகமது நீண்டநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை போலீசார், சபி முகமதுவை கழிவறைக்கு சென்று தேடினர். ஆனால் அங்கு அவர் இல்லை. போலீசாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு கைதி சபி முகமது நைசாக தப்பி ஓடிவிட்டது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த போலீசார், இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

சென்னை முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். தப்பி ஓடிய கைதி சபி முகமதுவை தேடும் பணியில் புளியந்தோப்பு தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். அப்போது வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம் அருகே கைதி பதுங்கி இருப்பது தெரிந்தது.

உடனடியாக புளியந்தோப்பு தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று கைதி சபி முகமதுவை சுற்றி வளைத்து பிடித்தனர். தப்பி ஓடிய 3 மணிநேரத்தில் மீண்டும் கைதியை மடக்கி பிடித்த போலீசார், அவரை வண்ணாரப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். இதுபற்றி வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த கைதி தப்பி ஓடிய சம்பவம் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story