திருவாரூர்-திருத்துறைப்பூண்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்


திருவாரூர்-திருத்துறைப்பூண்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 25 Sept 2021 6:30 PM IST (Updated: 25 Sept 2021 6:30 PM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நிர்வாகிகள் தாக்கப்பட்டதை கண்டித்து திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியம் கே.மேலூர் என்ற இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்ற சென்ற நிர்வாகிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்ட கும்பலை கண்டித்து திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகே ரவுண்டானாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் வடிவழகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணை செயலாளர் கணேசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் தமிழ்செல்வன் மாநில துணை செயலாளர் அறவாணன், நகர செயலாளர் ஆசைதம்பி, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை தொகுதி செயலாளர் நெப்போலியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல திருத்துறைப்பூண்டி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கிழக்கு கடற்கரை சாலை பாமணி, கடைத்தெருவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் தலைக்காடு ரஜினி தலைமையில், திருவாரூர் மாவட்ட துணை செயலாளர் முல்லை வளவன், நகர செயலாளர் ஜான்மைக்கேல், ராஜ், பாமணி பாலசுரேஷ் ஆகியோர் முன்னிலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் தூத்துக்குடி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ½ அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story