அரிவாளால் வெட்டி பெண் படுகொலை
கழிவுநீர் செல்வதில் ஏற்பட்ட தகராறில் அரிவாளால் வெட்டி பெண் கொலை செய்யப்பட்டார். கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி
கழிவுநீர் செல்வதில் ஏற்பட்ட தகராறில் அரிவாளால் வெட்டி பெண் கொலை செய்யப்பட்டார். கொலை செய்து விட்டு தலைமறைவான தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
அரிவாளால் வெட்டினார்
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கல்லட்டி மலைப்பாதை 11-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 45), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சோபனா குமாரி (41). மலைச்சரிவான பகுதி என்பதால் புஷ்பராஜ் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர், அதே இடத்தில் கீழ்பகுதியில் பாலசுப்பிரமணி என்பவரது மகன் மணிகண்டன் (30) வீட்டு முன்பு சென்றது. தனது வீட்டு முன்பு கழிவுநீர் செல்வதால் மணிகண்டன் அடிக்கடி சோபனா குமாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று தனது வீட்டு முன்பு கழிவுநீர் செல்வதை பார்த்த மணிகண்டன் சோபனா குமாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே தகாத வார்த்தைகளை பேசவே தகராறு முற்றியது. இதனால் ஆத்திரத்தில் மணிகண்டன் அரிவாளால் சோபனா குமாரியை தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி உள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர் தலையில் இருந்து ரத்தம் வெளியேறியது. உடனே அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே சோபனா குமாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல் ஊட்டி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் புதுமந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கழிவுநீர் செல்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் மணிகண்டன் பெண்ணை கொலை செய்தது தெரியவந்தது. அரிவாளால் வெட்டிய பின்னர் மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story