ஒரே நாளில் 28 ரவுடிகள் கைது; ஆயுதங்கள் பறிமுதல்


ஒரே நாளில் 28 ரவுடிகள் கைது; ஆயுதங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 25 Sept 2021 9:27 PM IST (Updated: 25 Sept 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 28 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 11 அரிவாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 28 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 11 அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

28 ரவுடிகள்

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 28 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 11 அரிவாள் மற்றும் கூர்மையான ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
இதில் கொலை, கொள்ளை, திருட்டு என 16 வழக்குகளில் சம்பந்தப்பட்ட காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடி கருப்பசாமி மகன் மாரிசெல்வம் (வயது 26) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இது தவிர பழைய வழக்குகளில் ஈடுபட்டுள்ளவர்கள் 84 பேர் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 107 மற்றும் 110 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ரோந்து பணி தொடரும்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் சந்தேகத்திற்குரிய வகையில் நபர்கள் தங்கி உள்ளார்களா என்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களின் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து கஞ்சா போன்ற போதை பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுகிறதா? என தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் போது மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த தீவிர ரோந்து பணி தொடர்ந்து நடைபெறும் என்றும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story