தூத்துக்குடியில் பக்கிள் ஓடை தூர்வாரும் பணி


தூத்துக்குடியில் பக்கிள் ஓடை தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 25 Sept 2021 9:48 PM IST (Updated: 25 Sept 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை தூர்வாரும் பணியை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பக்கிள் ஓடை தூர்வாரும் பணியை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பக்கிள் ஓடை 

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தூய்மையான தூத்துக்குடி திட்டத்தின் கீழ் கடந்த 20-ந் தேதி முதல் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வாருகால்களும் தூர்வாரப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பக்கிள் ஓடை தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது.

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார். கனிமொழி எம்.பி., சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து பின்னர் கொடியசைத்து பணியை தொடங்கி வைத்தனர்.

பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல்

பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தூய்மையான தூத்துக்குடி என்ற திட்டத்தின் மூலம் கடந்த ஒரு வாரமாக மண் அதிகமாக தேங்கியுள்ள கால்வாய்களில் தூய்மை பணியாளர்கள் மூலம் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் உள்ள பக்கிள் ஓடையை 12 பொக்லைன் எந்திரம் உதவியுடன் 200 பணியாளர்கள் சுத்தம் செய்து வருகிறார்கள்.

மழைக்காலம் வர இருப்பதால் பக்கிள் ஓடை வழியாகத்தான் தண்ணீர் கடலுக்கு செல்லும். பக்கிள் ஓடையை சுத்தம் செய்வதன் மூலம் மழை காலத்தில் மண் அடைப்பு ஏதும் இல்லாமல் தண்ணீர் முழுவதுமாக வெளியேறிவிடும்.
இந்த முழு வாரமும் தூய்மையான தூத்துக்குடி திட்டத்தின் கீழ் நீர்வழி பாதைகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டுகிறது. மேலும் மாநகராட்சி பகுதியில் சுமார் 5 ஆயிரம் பேர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர் வரும் மழை காலங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். 

அங்கன்வாடி கட்டிடம்

தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட சுப்பையா பூங்கா பகுதியில் மாநகராட்சியின் சீர்மிகு நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.33.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் திறந்து வைத்தனர். 
முன்னதாக தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடந்த கிராம சபையின் முக்கியத்துவம் குறித்த பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறையில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி நிர்வாக பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி பொறியாளர் சரவணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (சமூக நலத்துறை) தனலட்சுமி மற்றும் அலுவலர்கள், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story