திண்டுக்கல் மாநகராட்சியில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தினால் தங்க நாணயம் பரிசு
திண்டுக்கல் மாநகராட்சியில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தினால் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி கலெக்டர் விசாகன் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கமிஷனர் சிவசுப்பிரமணியன், நகர்நல அலுவலர் இந்திரா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது. அதன்மூலம் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் மாநகராட்சியாக திண்டுக்கல்லை மாற்ற வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதையடுத்து முகாமுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. இதற்கிடையே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வோரை ஊக்கப்படுத்தும் வகையில் குலுக்கல் முறையில் பரிசு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி முதல் தவணை தடுப்பூசி செலுத்தும் நபர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. அதன்படி முதல் பரிசாக 3 பேருக்கு தங்க நாணயம், 2-ம் பரிசாக 3 பேருக்கு செல்போன், 3-ம் பரிசாக 5 பேருக்கு பட்டுப்புடவை, 4-ம் பரிசாக 15 பேருக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பில் பொருட்கள் மற்றும் 10 ஆயிரம் பேருக்கு பரிசு கூப்பன் வழங்கப்பட உள்ளதாக கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story