குமரியில் இன்று 528 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்


குமரியில் இன்று 528 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 25 Sept 2021 11:54 PM IST (Updated: 25 Sept 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 528 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதன்மூலம் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 528 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதன்மூலம் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
கொரோனா தடுப்பூசி
குமரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மேலும் 3-வது அலை பரவவிடாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அதாவது கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது. 
மாவட்டத்தில் இதுவரை நீரழிவு நோய், இணை நோய் உள்ளவர்கள் 52 ஆயிரத்து 378 பேருக்கும், கர்ப்பிணிகள் 13 ஆயிரத்து 970 பேருக்கும், பாலூட்டும் பெண்கள் 12 ஆயிரத்து 942 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மொத்தத்தில் இதுவரை முதல் கட்ட தடுப்பூசி 9 லட்சத்து 7 ஆயிரத்து 536 பேருக்கும், இரண்டாம் கட்ட தடுப்பூசி 2 லட்சத்து 36 ஆயிரத்து 188 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது தடுப்பூசிகள் அதிக அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதால் தினமும் ஏராளமான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும் அவ்வப்போது மெகா தடுப்பூசி முகாம்களும் நடத்தப்படுகிறது.  
528 இடங்களில் முகாம்
அந்த வகையில் ஏற்கனவே 2 முறை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் 3-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் என அனைத்து இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடக்கிறது. அந்த வகையில் மொத்தம் 528 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக சுமார் ஒரு லட்சம் தடுப்பூசிகள் மாவட்ட நிர்வாகத்திடம் இருப்பு வைக்கப்பட்டு இருக்கிறது.
முகாம் தொடர்பாக பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதமாக ஊராட்சி பிரதிநிதிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும் பணியாளர்கள் மூலம் முகாம் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகே நடக்கும் முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story