பரமத்திவேலூரில் கான்கிரீட் தளம் இடிந்து விழுந்து சிறுவன் பரிதாப சாவு


பரமத்திவேலூரில் கான்கிரீட் தளம் இடிந்து விழுந்து சிறுவன் பரிதாப சாவு
x
தினத்தந்தி 25 Sept 2021 11:57 PM IST (Updated: 25 Sept 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூரில் வீடு சீரமைப்பு பணியின் போது கான்கிரீட் தளம் இடிந்து விழுந்ததில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

பரமத்திவேலூர்:
வீடு சீரமைப்பு பணி
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் நல்லியாம்பாளையம் கல்லூரி சாலை பகுதியை சேர்ந்தவர் மணியன். இவர் அந்த பகுதியில் உள்ள தனது பழைய வீட்டை சீரமைக்க முடிவு செய்தார். அதன்படி சீரமைப்பு பணிகள் நடந்து வந்தன. இதனிடையே வீட்டின் மேற்கூரையை ஹைட்ராலிக் டிரில்லிங் எந்திரம் மூலம் இடிக்கும் பணி நேற்று நடந்தது.
இந்த பணியில் பரமத்திவேலூர் வெட்டுக்காட்டுபுதூரை சேர்ந்த ரஹீம் மகன் அமீர்கான் (வயது 16) என்ற சிறுவன் உள்பட ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அமீர்கான் அங்கிருந்த ஒரு கான்கிரீட் தளத்தில் அமர்ந்து கொண்டு அதை இடிக்கும் பணியில் ஈடுபட்டான். அப்போது திடீரென அந்த தளம் இடிந்து விழுந்தது.
சிறுவன் பலி
இதில் அமீர்கான் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் இடிபாடுகளை அகற்றி சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் அமீர்கான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இதையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. 
இதுகுறித்து தகவல் அறிந்த பரமத்திவேலூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
பரமத்திவேலூரில் கான்கிரீட் தளம் இடிந்து விழுந்ததில் சிறுவன் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story