குறுகலான பாலத்தால் விபத்து அபாயம்
மடத்துக்குளம் அருகே குறுகலான பாலத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
போடிப்பட்டி
மடத்துக்குளம் அருகே குறுகலான பாலத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறுகலான பாலம்
பராமரிப்பில்லாத சாலைகளும் சாலை விபத்துகளுக்கான காரணங்களில் முக்கியமான ஒன்றாகும். ஆனால் பராமரிப்பில்லாத பள்ளமான சாலை, குறுகலான பாலம், சாலையோரத்தில் குவிந்திருக்கும் மணல் என்று விபத்துக்கான காரணங்களில் பலவும் ஒரே இடத்தில் இருப்பது அபாயகரமானதாக உள்ளது. மடத்துக்குளத்தை அடுத்த செங்கண்டிபுதூர் அருகே அமராவதி பிரதான கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலம் மிகவும் குறுகலாக உள்ளது.
மேலும் இந்த பாலத்தை ஒட்டிய சாலைப்பகுதி பல இடங்களில் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அத்துடன் பாலத்தின் மீதுள்ள சாலையின் இருபுறமும் மணல் குவியலாக உள்ளது. இந்த சாலை உடுமலையிலிருந்து மைவாடி, செங்கண்டிபுதூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக கணியூர், தாராபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் வழித்தடமாக உள்ளது.
மண் குவியல்
அத்துடன் தற்போது சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காகவும், தொழில் நிறுவனங்களுக்காகவும் இந்த சாலையில் கனரக வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்படுகிறது. இதனால் இந்த குறுகிய பாலத்தை இருசக்கர வாகன ஓட்டிகள் கடக்கும் போது மண் குவியல் மற்றும் மோசமான சாலையால் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. அதிலும் இரவு நேரத்தில் இந்த பகுதியைக் கடப்பவர்கள் மிகுந்த அச்சத்துடனேயே கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
கனரக வாகனங்கள் இந்த பாலத்தைக் கடக்கும் போது பாதசாரிகள் ஒதுங்கி நிற்கக் கூட முடியாத அளவுக்கு பாலத்தில் மண் குவியல் உள்ளது. எனவே இந்த பாலத்திலுள்ள மண் குவியலை அகற்றவும், சாலையை சீரமைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குறுகலான பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story