5 நாட்களில் 101 ரவுடிகள் கைது
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் 101 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு டி.ஜி.பி. வழங்கிய ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் வழங்கினார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் 101 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு டி.ஜி.பி. வழங்கிய ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் வழங்கினார்.
101 ரவுடிகள் கைது
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 21&ந் தேதி முதல் நேற்று வரை மாவட்டம் முழுவதும் 101 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இதையொட்டி அவர்களை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு விழா சிவகங்கையில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் பேசியதாவது :
தமிழக டி.ஜி.பி. உத்தரவின்பேரில் கடந்த 5 நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் 101 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட அளவில் 10 ஆண்டுகளில் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள். கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும் சாதி கலவரங்களை தூண்டுபவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டது.
12 தனிப்படைகள்
அவர்களை பிடிப்பதற்காக மாவட்ட அளவில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டன, சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை, காரைக்குடி, மற்றும் திருப்பத்தூர் ஆகிய 5 போலீஸ் சப்&டிவிசன்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு சப்&டிவிசனுக்கும் தலா 2 தனிப்படையும் மாவட்ட அளவில் போலீஸ் சூப்பிரண்டுக்கு 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. இவர்கள் தேடுதல் வேட்டை நடத்தியதில் 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து வாள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பல இடங்களில் கண்மாய்பகுதிகளில் ரவுடிகள் குடிசை போட்டு தங்கி உள்ளனர். அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்து குடிசைகளை அப்புறப்படுத்தியுள்ளனர்.
மேலும் தொடர்ந்து அவர்கள் குடிசை அமைத்து தங்குவதை தடுக்க ட்ரோன் கேமரா கொண்டு கண்மாய் பகுதிகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தகவல் தெரிவிக்க உத்தரவு
திருப்பாச்சேத்தி அரிவாள் மிக பிரசித்தி பெற்றது. கொலை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் இங்கு தயாரிக்கப்படும் அரிவாள் போன்றவைகளை பயன்படுத்துகின்றனர். எனவே இங்கு உள்ள அரிவாள் தயார் செய்பவர்களை போலீசார் அழைத்து பேசி உள்ளனர். அரிவாள் வாங்குபவர்களின் விபரத்தை பதிவு செய்து அதை போலீசாரிடம் தெரிவிக்கும்படி கூறப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யாதவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்கள் நடைபெற்ற ரவுடிகள் தேடுதல் வேட்டையில் மாவட்டம் முழுவதும் 850 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
சிவகங்கை மாவட்ட போலீசாரின் செயல்பாட்டை பாராட்டி காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு ரூ.25, ஆயிரம் வழங்கியுள்ளார். அந்த தொகை தனிப்படை மற்றும் இந்தப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் தனிப்படை போலீசாருக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கினார்.நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Related Tags :
Next Story