மராட்டியத்தில் அடுத்த மாதம் 22-ந் தேதி முதல் தியேட்டர்கள் திறப்பு: உத்தவ் தாக்கரே
மராட்டியத்தில் அடுத்த மாதம் 22-ந் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் அடுத்த மாதம் 22-ந் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.
பள்ளி, வழிப்பாட்டு தலங்கள்
மராட்டியத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா 2-வது அலை உச்சத்தை தொட்டது. நாள்தோறும் சுமார் 70 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து மாநிலத்தில் கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. பொது மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை அடுத்து, மாநிலத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது மாநிலத்தில் நாள்தோறும் சுமார் 3 ஆயிரத்து 500 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் பள்ளிகள், வழிப்பாட்டு தலங்களை திறப்பது தொடர்பான அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டது. இதன்படி மாநிலத்தில் அடுத்த மாதம் 4&ந் தேதி முதல் ஊரகபகுதிகளில் 5 முதல் 12-ம் வகுப்பு வரையும், நகர்பகுதிகளில் 8 முதல் 12-ம் வகுப்பு வரையும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
சிலைகளை தொட தடை
இதேபோல 7-ந் தேதி முதல் அனைத்து வழிப்பாட்டு தலங்களும் திறக்கப்பட உள்ளன. இதில் கோவிலுக்குள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும், வழிப்பாட்டு தலங்களில் உள்ள சிலைகள், புனிதநூல்கள் போன்றவற்றை யாரும் தொடக்கூடாது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோல முதியவர்கள், 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வழிபாட்டு தலங்களுக்கு வர வேண்டாம் எனவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
தியேட்டர்கள் திறப்பு
இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று கொரோனா பணிக்குழு, சினிமா துறையை சேர்ந்த ரோகித் ஷெட்டி, குணால் கபூர், மராத்தி நடிகர்கள் சுபோத் பாவே, ஆதேஷ் பண்டேகர் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் மாநிலத்தில் அடுத்த மாதம் 22-ந் தேதி முதல் தியேட்டர்கள், நாடக அரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்படுவதாக அறிவித்தார். தியேட்டர் உரிமையாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். மேலும் தியேட்டர்கள் திறப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
Related Tags :
Next Story