செல்பி எடுத்தபோது அணையில் மூழ்கி கம்ப்யூட்டர் என்ஜினீயர் சாவு
சிக்பள்ளாப்பூர் அருகே நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சிக்கலமடுகு அணையின் நீர்த்தேக்க பகுதியில் உள்ள மரத்தில் ஏறி செல்பி எடுத்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் மரக்கிளை முறிந்து தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு: சிக்பள்ளாப்பூர் அருகே நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சிக்கலமடுகு அணையின் நீர்த்தேக்க பகுதியில் உள்ள மரத்தில் ஏறி செல்பி எடுத்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் மரக்கிளை முறிந்து தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
கம்ப்யூட்டர் என்ஜினீயர்
பெங்களூரு சுங்கதகட்டேயை சேர்ந்தவர் ரோஹித்(வயது 25). இவர், கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். தனியார் நிறுவனத்தில் ரோஹித் பணியாற்றி வந்தார். நேற்று ரோஹித்தின் நண்பர் சந்தோசுக்கு பிறந்தநாள் ஆகும். இந்த பிறந்தநாளை கொண்டாடுவதற்காக ரோஹித் மற்றும் அவரது நண்பர்கள் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்திற்கு சென்றிருந்தார்கள்.
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் நந்திகிரிதாமா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிக்கலமடுகு அணைகட்டுக்கு ரோஹித், அவரது நண்பர்கள் சென்றிருந்தனர். அங்கு வைத்து அவர்கள் மதுஅருந்தியதாக தெரிகிறது. குடிபோதையில் இருந்த அனைவரும் அணைகட்டில் குளித்தார்கள்.
தண்ணீரில் மூழ்கி சாவு
அப்போது ரோஹித் மட்டும் அணைகட்டுக்குள் இருந்த மரத்தில் ஏறி செல்பி எடுத்து கொண்டு இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் மரக்கிளை திடீரென்று முறிந்தது. இதன் காரணமாக மரத்தில் இருந்து தண்ணீருக்குள் ரோஹித் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். பின்னர் தண்ணீரில் மூழ்கி ரோஹித் பரிதாபமாக இறந்து விட்டார். தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்தனர்.
பின்னர் நீண்ட நேரம் போராடி ரோஹித்தின் உடலை மீட்டனர்.
குடிபோதையில் மரத்தில் மீது ஏறி செல்பி எடுத்ததால் இந்த விபரீதம் நடந்து கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலியானது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நந்திகிரிதாமா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story