சென்னையில் காச நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க சிறப்பு வழிகாட்டு குழு


சென்னையில் காச நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க சிறப்பு வழிகாட்டு குழு
x
தினத்தந்தி 26 Sept 2021 5:06 PM IST (Updated: 26 Sept 2021 5:06 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் காச நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காசநோய் பாதித்த நபர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதனுடனான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பேசியதாவது:-

கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு முதல் காசநோய் பாதித்த நபர்களை கண்டறியும் சதவீதம் குறைந்துள்ளது. எனவே, வீடு, வீடாக சென்று காசநோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து, விழிப்புணர்வு பிரசாரங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்படும். காசநோய் பாதித்த நபர்களை சிகிச்சைக்கு பிறகும் தொடர்ந்து குறைந்தது 2 ஆண்டுகளுக்கு கண்காணிக்க வேண்டும். இதன்மூலம் சிகிச்சை முடிந்த நபரின் தொடர்புடைய நபர்களுக்கு காசநோய் அறிகுறிகள் இருப்பின் எளிதாக கண்டறிய இயலும்.

சிறப்பு குழு

காசநோய் இல்லா சென்னை என்ற திட்டத்தில் பெறப்பட்ட அனுபவங்களை கொண்டு நோய் கண்டறியும் முறைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தவும், சிகிச்சைக்கான கட்டமைப்புகளை விரிவுபடுத்தவும், விழிப்புணர்வு பிரசாரங்களை தீவிரமாக முன்னெடுக்கவும் வழிகாட்டு குழு அமைக்கப்படும்.

சென்னையில் 1 லட்சம் நபர்களில் 249 நபர்களுக்கு காசநோய் பாதிப்பு இருப்பதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ளன. காசநோயினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அதிலிருந்து முற்றிலும் பாதுகாப்பாக குணமடையலாம். எனவே, காசநோய் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு அருகாமையிலுள்ள மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் துணை கமிஷனர்கள் டாக்டர் எஸ்.மனிஷ், மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.எஸ்.ஹேமலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story