பட்டுக்கோட்டை அருகே பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட தகராறில் டிரைவர் குத்திக்கொலை - வாலிபர் கைது


பட்டுக்கோட்டை அருகே பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட தகராறில் டிரைவர் குத்திக்கொலை - வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 Sept 2021 5:34 PM IST (Updated: 26 Sept 2021 5:34 PM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை அருகே பிறந்த நாள் விழாவில் ஏற்பட்ட தகராறில் டிரைவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த பொன்னவராயன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் என்பதால் அவருடைய நண்பர்கள் உறவினர்கள் 10-க்கும் மேற்பட்டோர் கேக் வெட்டியும், மது அருந்தியும் பிறந்தநாள் விழாவை கொண்டாடி உள்ளனர். இந்த விழாவில் அதே பகுதியை சேர்ந்த டிரைவர் புண்ணியமூர்த்தி(வயது 42), விவசாயி சரவணன்(34) ஆகிய இருவரும் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் ஆகாதவர்கள். அப்போது மது அருந்திக் கொண்டிருந்த புண்ணியமூர்த்திக்கும் சரவணனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதில் ஒருவருக்கொருவர் தரக்குறைவாக பேசி தாக்கி கொண்டனர்.

அப்போது சரவணனின் தாய் குறித்து புண்ணியமூர்த்தி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். புண்ணியமூர்த்தி வீட்டின் திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்தார். அவர் மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்த சரவணன் இரவு புண்ணியமூர்த்தி வீட்டின் சுவர் ஏறி குதித்து தூங்கிக் கொண்டிருந்த புண்ணியமூர்த்தியின் நெஞ்சில் குத்தியுள்ளார். 

கத்தியால் குத்தப்பட்டதில் வலி தாங்க முடியாமல் புண்ணியமூர்த்தி சத்தம் போட்டு உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே புண்ணியமூர்த்தி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். உடனே சரவணன் அங்கிருந்து தப்பியோடினார்.

இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட புண்ணியமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இரவு முழுவதும் தேடி போலீசார் சரவணனை கைது செய்தனர். இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பிறந்த நாள் விழாவில் ஏற்பட்ட தகராறில் டிரைவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story