குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை - மாநகராட்சி கூட்டத்தில் கலெக்டருக்கு பரிந்துரை


குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை - மாநகராட்சி கூட்டத்தில் கலெக்டருக்கு பரிந்துரை
x
தினத்தந்தி 26 Sept 2021 6:12 PM IST (Updated: 26 Sept 2021 6:12 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை முற்றிலுமாக தடை செய்ய கலெக்டருக்கு பரிந்துரைப்பது என நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் கால்வாய், வாய்க்கால்கள் தூர்வாரும் பணியின் போது டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் சிக்கியது. எனவே நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையர் ஆஷாஅஜித் தலைமை தாங்கினார். மாநகர நல அதிகாரி விஜய்சந்திரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் திருமண மண்டப உரிமையாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர், குடியிருப்போர் நலச்சங்கத்தினர், சிறு வியாபாரிகள், மீன்வியாபாரிகள், வடசேரி தெரு வியாபாரிகள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மாதவன் பிள்ளை, பகவதி பெருமாள், ராஜேஷ், ஜாண், சத்தியராஜ், தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் வகையில் உள்ள தண்ணீர் பாட்டில்கள் (300 மில்லி, 500 மில்லி, 1 லிட்டர், 2 லிட்டர்) , ஜூஸ் பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் கண்டெய்னர்கள் ஆகியவற்றை தடை செய்வது தொடர்பாகவும், 5 லிட்டர் குடிநீர் கேன்களை மட்டும் பயன்பாட்டில் இருக்க செய்வது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் வியாபாரிகள், குடியிருப்போர் நல சங்கத்தினர், திருமண மண்டபம் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் மாநகராட்சியின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, 5 லிட்டர் தண்ணீர் பாட்டிலை தவிர மற்ற அனைத்து குடிநீர் மற்றும் ஜூஸ் பாட்டில்களையும், கண்டெய்னர்கள் உள்ளிட்ட பிற பிளாஸ்டிக் பொருட்களையும் முற்றிலுமாக தடை செய்ய சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து மாநகராட்சி தரப்பில் மாவட்ட கலெக்டருக்கு 5 லிட்டர் தண்ணீர் பாட்டிலை தவிர அதற்கு குறைவான தண்ணீர் பாட்டில்கள் மற்றும் ஜூஸ் பாட்டில்கள், பிளாஸ்டிக் கன்டெய்னர்கள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியிலும், குமரி மாவட்ட பகுதியிலும் தடை செய்ய பரிந்துரைப்பது என முடிவு செய்யப்பட்டது.

Next Story