மழைச்சோறு எடுத்து கிராம மக்கள் வழிபாடு
பல்லடம் அருகே பெருமாகவுண்டம்பாளையத்தில் மழை வேண்டி வருண பகவானுக்கு மழைச்சோறு எடுத்து கிராம மக்கள் வழிபாடு நடத்தினர்.
பல்லடம்
பல்லடம் அருகே பெருமாகவுண்டம்பாளையத்தில் மழை வேண்டி வருண பகவானுக்கு மழைச்சோறு எடுத்து கிராம மக்கள் வழிபாடு நடத்தினர்.
மழைச்சோறு
தேன்சிந்தும் தமிழில் பதிகம்பாடி கோவில் நடை திறந்த வரலாறும், கேட்க கேட்க தெவிட்டாத தெள்ளமுதம் போன்ற கவி பாடி கோவில் நடையை அடைத்த வரலாறும் தமிழகத்தில் உண்டு. அதுபோல் நோய் நீங்கவும், மழை வரவும் பதிகம் பாடுவது தொன்று தொட்டு வரும் நடைமுறை. அந்த வகையில் பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி பெருமாகவுண்டம்பாளையம் கிராமத்தில் மழை வேண்டி கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக மழைச்சோறு எடுத்து விநாயகர் மற்றும் வருண பகவானுக்கு கூட்டு பிரார்த்தனை செய்து வருகிறார்கள். அப்படி வழிபாடு நடத்தினால் மழை பெய்யும் என்பது ஐதீகம். அதன்படி அந்த அக்கிராம மக்கள் மழைச்சோறு வழிபாடு நடத்த முடிவு செய்தனர்.
கோடங்கிபாளையம் விநாயகர் கோயிலில் மழைச்சோறு எடுத்தல் நிகழ்வு மேள, தாளத்துடன் தொடங்கியது. மாட்டு சாணத்தில் பிள்ளையார் உருவம் வைத்து அதற்கு மலர் மாலை சூடி, அதனை வயதில் மூத்த பெண் தனது தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வீடு வீடாக சென்றார். அவருக்கு வீடு தோறும் பிள்ளையாரை தலையில் சுமந்தபடி சென்ற மூத்த பெண்ணின் பாதத்திற்கு தண்ணீர் விட்டு கழுவி அவரை வரவேற்றனர்.
பூஜை
குடத்தில் சாதம் போட்டனர். அவற்றை ஒரு பெண் சேகரித்து எடுத்து வந்தார். ஊர் முழுவதும் சேகரிக்கப்பட்ட சோற்றை விநாயகர் கோவில் முன்பு ஒரு அண்டாவில் கொட்டி தண்ணீர் மோர் ஊற்றி கலக்கி கூழ் ஆக்கி பூஜை செய்து விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து சாணப்பிள்ளையாரை ஊர் பொதுக்கிணற்று தண்ணீரில் கரைத்தனர்.
அதன் பின்னர் கோவில் திடலில் தரையில் அமர்ந்து சோற்று கூழை அனைவரும் பகிர்ந்து சாப்பிட்டனர். கைகளை கழுவாமல் ஊர் எல்லை வரை சென்று முறம், விளக்குமாறு, போன்றவரை ஒரு எல்லையில் கட்டி வைத்து விட்டு மழை வேண்டி ஒப்பாரி வைத்து கண்ணீர் விட்டு அழுதனர். அதைத்தொடர்ந்து விநாயகர் வழிபா செய்யுங்கள் நிச்சயம் மழை வரும் என்று வயதில் மூத்தவர்கள் கூற அனைவரும் விநாயகர் முருகன் அம்மன் வேண்டி கூட்டு பிரார்த்தனை செய்து விட்டு வீடு திரும்பினர். இந்த நூதன வழிபாடு மூலம் முன்னோர் கூறிய வழியில் நிச்சயம் மழை வரும் என்று கிராம மக்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story