பாகூர் பகுதியில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தது.


பாகூர் பகுதியில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தது.
x
தினத்தந்தி 26 Sept 2021 10:24 PM IST (Updated: 26 Sept 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

பாகூர் பகுதியில் ஒரே நாள் இரவில் 110 மில்லி மீட்டர் மழை பதிவானது. பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது.

பாகூர், செப்.
பாகூர் பகுதியில் ஒரே நாள் இரவில் 110 மில்லி மீட்டர் மழை பதிவானது. பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது. 
இடி மின்னலுடன் கூடிய மழை
மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை அதிகாலை வரை நீடித்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றன. 
இந்த மழையில் காரணமாக புதுச்சேரி புஸ்சி வீதி, காமாட்சியம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பல இடங்களில் சாலையோரம் நின்ற மரங்கள் சாய்ந்து விழுந்தன. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அந்த மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். புயலின் காரணமாக நேற்று மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்களது விசைப்படகுகள் தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
110 மில்லி மீட்டர் மழை
பாகூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி&மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணிநேரம் பெய்த கன மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குருவிநத்தம், சோரியாங்குப்பம், பரிக்கல்பட்டு, ஆராய்ச்சிகுப்பம், சேலியமேடு, குடியிருப்புபாளையம் ஆகிய பகுதிகளிலும் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது.
பாகூர் மற்றும் சுற்றுப்பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 500 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. பல இடங்களில் அறுவடை செய்து களத்தில் சேகரித்து வைத்திருந்த நெல்மணிகளும் மழையில் நனைந்தது. அதனை நேற்று காலை விவசாயிகள் ரோட்டில் கொட்டி உலர வைத்ததை காண முடிந்தது. பொதுப்பணித்துறை கணக்கெடுப்பின்படி பாகூர் பகுதியில் நேற்று ஒரே நாள் இரவில் 110 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

Next Story