இடி-மின்னலுடன் விடிய, விடிய மழை: மின்மாற்றிகள் வெடித்து சிதறியதால் இருளில் மூழ்கிய 30 கிரா-மங்கள் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன


இடி-மின்னலுடன் விடிய, விடிய மழை: மின்மாற்றிகள் வெடித்து சிதறியதால் இருளில் மூழ்கிய 30 கிரா-மங்கள் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன
x
தினத்தந்தி 26 Sept 2021 10:45 PM IST (Updated: 26 Sept 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் விடிய, விடிய மழை பெய்தது. இதில் மின்மாற்றிகள் வெடித்து சிதறியதில் 30 கிராமங்கள் இருளில் மூழ்கின. மேலும் மரங்கள் வேரோடு சாய்ந்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கடலூர், 

மத்திய கிழக்கு மற்றும் வடமேற்கு வங்க கடல் பகுதியல் குலாப் புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் ஒடிசா மாநிலம் கோபல்பூருக்கு சுமார் 140 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திரா மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும் சுமார் 190 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. 

இந்த புயல் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலம் இடையே நள்ளிரவில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் தாக்கம் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கடலூரில் இரவு 11.45 மணி அளவில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.


மரங்கள் சாய்ந்தன

இந்த மழையால் அவ்வப்போது பல்வேறு இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

 இதற்கிடையில் இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக அண்ணா விளையாட்டு மைதானம், மஞ்சக்குப்பம் மைதானத்தில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது.

கடலூர் அண்ணாநகர், செம்மண்டலம் ஆகிய இடங்களில் சாலையோரங்களில் நின்ற 2 மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று, அந்த மரங்களை அறுத்து அப்புறப்படுத்தினர். பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.


வெடித்து சிதறிய மின்மாற்றிகள்


 இதேபோல் நெல்லிக்குப்பம்,  மேல்பட்டாம்பாக்கம், அண்ணாகிராமம், பாலூர், நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. 

இதில் நெல்லிக்குப்பம் பகுதியில் 2 மின்மாற்றிகள் வெடித்து சிதறியது. அதேபோல் பல்வேறு இடங்களில் மின்மாற்றிகளில் இருந்த இன்சுலேட்டர் மற்றும் டிஸ்க் ஆகியன வெடித்து சிதறியது.


இதனால்,  நெல்லிக்குப்பம், தூக்கணாம்பாக்கம், பாலூர், அண்ணாகிராமம், மேல்மாம்பட்டு, எஸ்.புதூர், வரக்கால்பட்டு உள்ளிட்ட 30&க்கும் மேற்பட்ட கிராமங்கள் நேற்று இரவு முதல் இருளில் மூழ்கின. 

இதுப்றி அறிந்த நெல்லிக்குப்பம் மின்வாரிய செயற்பொறியாளர் லீனா தலைமையில் 10 உதவி பொறியாளர்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சேதமடைந்த டிரான்ஸ்பார்மர்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். 

இதன் மூலம் நேற்று நள்ளிரவில் தடை பட்ட மின்சாரம், மாலை 4 மணிக்கு பிறகே முழுமையாக சீராகி வினியோகிக்கப்பட்டது.  

 மழை அளவு

இதேபோல் குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், புவனகிரி, அண்ணாமலைநகர், வேப்பூர், காட்டுமயிலூர், தொழுதூர், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கலெக்டர் அலுவலக பகுதியில் 79.4 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

கொத்தவாச்சேரி-72
குறிஞ்சிப்பாடி-68
கடலூர் -67.2
வடக்குத்து-67
வானமாதேவி-57.6
பண்ருட்டி -47
பரங்கிப்பேட்டை- 39.4
குடிதாங்கி-&37.5
சேத்தியாத்தோப்பு-36
லக்கூர் -23.4
சிதம்பரம் -9.8
புவனகிரி -9
அண்ணாமலைநகர் -8.4
வேப்பூர் -7
காட்டுமயிலூர்-7
மே.மாத்தூர் -7
தொழுதூர் -5
கீழசெருவாய் -3
காட்டுமன்னார்கோவில்-1.3
விருத்தாசலம் -1.3
லால்பேட்டை-1


Related Tags :
Next Story