17 சாமி சிலைகள்- பூஜை பொருட்கள் கண்டெடுப்பு
கீழ்வேளூர் அருகே கோவில் திருப்பணிக்கு பள்ளம் தோண்டிய போது 17 சாமி சிலைகள்-பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சிலைகள் மற்றும் பொருட்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே கோவில் திருப்பணிக்கு பள்ளம் தோண்டிய போது 17 சாமி சிலைகள்& பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சிலைகள் மற்றும் பொருட்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
தேவபுரீஸ்வரர் கோவில்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே தேவூரில் அமைந்துள்ளது தேவபுரீஸ்வரர் கோவில். சோழர் காலத்தில் கட்டப்பட்ட மாடகோவிலான, இக்கோவில் 1,200 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த ஜூலை மாதத்தில் இருந்து திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கோவிலில் உள்ளே வடக்குபுறம் அமைந்துள்ள நவக்கிரக மண்டபத்தில் நேற்று முன்தினம் காலை புதிய நவக்கிரக மண்டபம் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது ஏதோ சத்தம் கேட்டு தொழிலாளர்கள் பள்ளத்தில் பார்த்த போது சாமிகள் சிலைகள் இருந்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் மீண்டும் பள்ளத்தில் மண்ணை போட்டு மூடி உள்ளனர்.
இதுகுறித்து கீழ்வேளூர் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
17 சாமி சிலைகள்
இதனை தொடர்ந்து தாசில்தார் மாரிமுத்து மற்றும் வருவாய்துறையினர் தேவபுரீஸ்வரர் கோவிலுக்கு நேற்று காலை வந்தனர். பின்னர் தாசில்தார், சப்&இன்ஸ்பெக்டர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் அங்கு பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது 4 அடி ஆழம் தோண்டிய போது பூமிக்கு அடியில் 17 சாமி சிலைகள் உள்பட 47 பூஜை பொருட்கள் இருந்தது.
இதில் திருவாச்சியுடன் அமைந்துள்ள பிரதோஷ நாயனார், காட்சி கொடுத்த நாயகர், நாயகி, தெய்வானை, வள்ளி, வில்லேந்திய வேலவர், பைரவர் உள்ளிட்ட 17 சாமி சிலைகளும், சங்கு, சூலம், சரளமணி, தீபம் உள்பட 47 பொருட்களும் இருந்தன. சிலைகள் அரை அடி முதல் 4 அடி உயரம் வரை இருந்தது.
கோவிலில் திரண்ட கிராமமக்கள்
கோவிலில் தோண்ட, தோண்ட சாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் கிடைத்த தகவல் அறிந்த தேவூர் சுற்றுவட்டார கிராம மக்கள் தேவபுரீஸ்வரர் கோவிலில் திரண்டனர். கண்டெடுக்கப்பட்ட 17 சாமி சிலைகள் உள்பட 47 பொருட்களை தாசில்தார் மாரிமுத்து மற்றும் வருவாய்துறையினர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இந்த சிலைகளை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்த பிறகு தான் இவை ஐம்பொன் சிலைகளாக என்பது குறித்து தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கோவிலில் தோண்ட, தோண்ட சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story