கரூரில் 50 ஆயிரத்து 113 பேருக்கு கொரோனா தடுப்பூசி
கரூர் மாவட்டத்தில் 624 இடங்களில் நடைபெற்ற மெகா சிறப்பு முகாம்களில் 50 ஆயிரத்து 113 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கரூர்,
மெகா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று 3-வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 165 இடங்களிலும், கரூர் சட்டமன்ற தொகுதியில் 96 இடங்களிலும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 196 இடங்களிலும், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 162 இடங்களிலும், 5 நடமாடும் முகாம்கள் என 624 இடங்களில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக தடுப்பூசி டோஸ்களும் வரவழைக்கப்பட்டிருந்தன.
ஆன்லைனில் பதிவு
இந்த நிலையில் முகாம்களில் தடுப்பூசி போட நேற்று காலை முதலே பொதுமக்கள் வரத்தொடங்கினர். 18 வயதிற்கு மேற்பட்டவர்களின் அடையாள அட்டைகள் சரிபார்த்து, தடுப்பூசி செலுத்தப்பட்டன. பொதுமக்கள் பல்வேறு இடங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது.
தடுப்பூசி போடும் பணியில் செவிலியர்களும், அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றும் வகையில் சமூக விலகலை உறுதிசெய்தல், முகக்கவசம் அணிந்து வருவதை உறுதிசெய்தல் உள்ளிட்ட பணிகளில் குழந்தைகள் நல மைய பணியாளர்களும், சுயஉதவிக்குழுவினரும் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் தகவல்களை ஆன்லைனில் பதிவு செய்யும் பணியில் அந்தந்த மையங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
நொய்யல்
நொய்யல், சேமங்கி, நடையனூர், கரைப்பாளையம், ஓலப்பாளையம், மூலிமங்கலம், புதுகுறுக்குபாளையம், கரைப்பாளையம், தவிட்டுப்பாளையம், கட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி போடப்பட்டது.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் பகுதியில் 3-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் அரசு மருத்துவமனை, காந்தியார் மண்டபம், விவசாய அலுவலகம், காந்தியார் தொடக்கப்பள்ளி, புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செம்மடை, அய்யம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இந்த முகாம்களுக்கு வேலாயுதம்பாளையம், ஒலப்பாளையம், அய்யம்பாளையம், வாங்கல் ஆகிய ஆரம்ப சுகதார நிலையம் சார்பில் மருத்துவ குழுவினர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினார்கள்.
இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், கார்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் காந்தியார் தொடக்கப்பள்ளியில் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் நேற்று 624 இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 50 ஆயிரத்து 113 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாம்களில் கலந்து கொண்டவர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும், நீண்டவரிசையில் நின்று கொரோனா முதல் மற்றும் 2-வது தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.
Related Tags :
Next Story