திருவண்ணாமலையில் ரூ.5 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்


திருவண்ணாமலையில் ரூ.5 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 26 Sept 2021 11:46 PM IST (Updated: 26 Sept 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் ரூ.5 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் ரூ.5 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை

திருவண்ணாமலை வாணிய தெருவில் உள்ள லாரி பார்சல் சர்வீஸ் அலுவலகத்திற்கு பெங்களூருவில் இருந்து லாரி மூலம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கொண்டு வரப்படுவதாக திருவண்ணாமலை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமான அலுவலர் ராமகிருஷ்ணன் மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எழில்சிக்கையராஜா, கலேஷ்குமார், சிவபாலன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று காலை போத்தராஜா தெரு மற்றும் வாணிய தெருவில் சோதனை நடத்தினர். 

அப்போது பெங்களூருவில் இருந்து லாரி மூலம் கொண்டு வரப்பட்ட 5 பண்டல்கள் போத்தராஜா தெருவில் சாலையோரம் கிடந்து உள்ளது. இதில் இருந்த பதிவு எண்ணை கொண்டு அந்த பண்டல்கள் சம்பந்தப்பட்ட லாரி பார்சல் சர்வீஸ் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

பின்னர் அந்த பண்டல்களை பிரித்து பார்த்த போது, குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

குட்கா பொருட்கள் பறிமுதல்

அப்போது அவர் பண்டல்களை பார்வையிட்ட போது, குட்கா பொருட்களின் வாசனை தெரியாமல் இருக்க ஊதுவத்திக்கள் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அந்த குட்கா பொருட்கள் இருந்த 5 பண்டல்களையும் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

பின்னர் லாரி பார்சல் சர்வீஸ் அலுவலகத்தை மூடி சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பண்டல்களுக்கும், அலுவலகத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று பணியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எதுவாக இருந்தாலும் விளக்கமாக எழுதி கொடுங்கள் என்று உரிமையாளர்களிடம் தெரிவித்தனர். உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர். 


Next Story