சூளகிரியில் பயங்கர விபத்து கார்கள் மோதல் 2 பேர் சாவு


சூளகிரியில் பயங்கர விபத்து கார்கள் மோதல் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 27 Sept 2021 12:27 AM IST (Updated: 27 Sept 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரியில் நடந்த பயங்கர விபத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 2 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.

சூளகிரி:
சூளகிரியில் நடந்த பயங்கர விபத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 2 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
சினிமாவை போன்று நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
தனியார் நிறுவன ஊழியர்
கர்நாடக மாநிலம் பெங்களூரு வயாலிகாவல் பகுதியை சேர்ந்த சத்யபிரசாத் மகன் சுமந்த் (வயது 30). இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று காலை பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு தனது நண்பரை பார்க்க சொகுசு காரில் வந்தார்.
அப்போது சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் பகுதியில் சென்ற போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சாலையில் இருந்த தடுப்புச்சுவரை இடித்துக் கொண்டு சென்ற கார், சாலையில் மற்றொரு புறத்துக்குள் புகுந்து தறிக்கெட்டு ஓடியது.
2 பேர் சாவு
அந்த வழியாக பெங்களூரு நோக்கி சென்ற காரும், சுமந்த் வந்த காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதின. இதில் 2 கார்களும் தூக்கி வீசப்பட்டதுடன் அப்பளம் போல் நொறுங்கியது. கண் இமைக்கும் நேரத்தில் இந்த பயங்கர விபத்து நடந்தது.
இதில் சுமந்த்தும், எதிரே வந்த காரில் இருந்தவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் இறந்த 2 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கி நொறுங்கி கிடந்த கார்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்தால் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டாக்சி டிரைவர்
விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், எதிரே வந்த காரில் இருந்தவர் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் வின்சென்ட் கோபி (34) என்பதும், இவர் பெங்களூரு கோரமங்களாவில் டாக்சி டிரைவராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இவர், சொந்த ஊருக்கு வந்து விட்டு பெங்களூரு சென்ற போது விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விபத்தில் இறந்த சுமந்துக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. நைய்னா (24) என்ற மனைவி உள்ளார். பலியான வின்சென்ட் கோபிக்கு மரியா என்ற மனைவியும், செபின் (10), ஆல்ஸ்டின் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இந்த பயங்கர விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story