6 மாதங்களுக்கு பிறகு ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அருவியில் குளிக்க தடை நீடிப்பு
6 மாதங்களுக்கு பிறகு ஒகேனக்கல் சுற்றுலா தலம் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் அருவியில் குளிப்பதற்கு தடை நீடிக்கிறது.
தர்மபுரி:
6 மாதங்களுக்கு பிறகு ஒகேனக்கல் சுற்றுலா தலம் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் அருவியில் குளிப்பதற்கு தடை நீடிக்கிறது.
இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கொரோனா பரவல்
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலம் கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்தில் மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் யாருக்கும் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் தொற்று குறைந்து வருவதாலும், ஒகேனக்கல் வாழ்பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் சுற்றுலா ஆர்வத்தை கருத்தில் கொண்டும், 6 மாதங்களுக்கு பிறகு தமிழக அரசின் வழிபாட்டுதலின்படி உலக சுற்றுலா தினமான இன்று (திங்கட்கிழமை) முதல் பல்வேறு நிபந்தனைகளுடன் ஒகேனக்கல் சுற்றுலா தலம் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தி கொண்டவர்கள் மட்டும் ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்று அல்லது ஆன்லைன் ஆதாரம் காண்பிக்க வேண்டும். ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தடுப்பூசி செலுத்திகொண்டது குறித்து மடம் சோதனைச்சாவடி, ஒகேனக்கல் பஸ் நிலையம் மற்றும் ஆலம்பாடி சோதனைச்சாவடி ஆகிய இடங்களில் சோதனை செய்யப்படுவார்கள். பரிசல் ஓட்டிகள், எண்ணெய் மசாஜ் தொழிலாளர்கள், சமையல் செய்பவர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டிருப்பதை உறுதி செய்யப்பட வேண்டும்.
அருவியில் குளிக்க அனுமதி மறுப்பு
சுற்றுலா பயணிகளுக்கு அருவிகள் மற்றும் காவிரி கரை ஓரங்களில் குளிக்க தடை நீடிக்கிறது. மேலும் பரிசல்களில் சென்று சுற்றிப்பார்க்க மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.
கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மடம் சோதனைச்சாவடியில் தனியார் வாகனங்கள் மாலை 4.30 மணிக்கு மேல் ஒகேனக்கல் நோக்கி செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story