தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்- கனிமொழி எம்.பி. பங்கேற்பு
மாவடி, சிவந்திபுரத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் கனிமொழி எம்.பி. பங்கேற்றார்.
ஏர்வாடி:
ஊரக உள்ளாட்சி தேர்தலில் களக்காடு ஒன்றியத்தில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மாவடியில் நடந்தது. தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார்.
அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மனோ தங்கராஜ், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ரைமண்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சுந்தர், வட்டார காங்கிரஸ் தலைவர் தனபால், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராஜன், செல்வகருணாநிதி, ஒன்றிய துணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அம்பை ஒன்றியத்தில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சிவந்திபுரத்தில் நடந்தது. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். அம்பை ஒன்றிய செயலாளர் பரணி சேகர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போல் எல்லா மாநிலத்திற்கும் முதல்-அமைச்சர் அமைய வேண்டும் என்று பிற மாநில மக்களும் விரும்பும் அளவிற்கு மு.க.ஸ்டாலின் ஆட்சி புரிந்து வருகிறார். தி.மு.க. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் பாதிக்குமேல் நிறைவேற்றப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மக்களுக்கு பணி செய்ய காத்திருக்கும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். தொடர்ந்து வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இதில் அமைச்சர் ஐ.பெரியசாமி, செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட கலை இலக்கிய பிரிவு செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story