நீண்ட நேரமாக செல்போனில் பேசியதை கண்டித்ததால் தொழிலாளியை கத்தியால் குத்திய மனைவி சிறையில் அடைப்பு


நீண்ட நேரமாக செல்போனில் பேசியதை கண்டித்ததால் தொழிலாளியை கத்தியால் குத்திய மனைவி சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 26 Sep 2021 10:03 PM GMT (Updated: 26 Sep 2021 10:03 PM GMT)

நீண்ட நேரமாக செல்போனில் பேசியதை கண்டித்ததால் தொழிலாளியை கத்தியால் குத்திய மனைவி சிறையில் அடைக்கப்பட்டார்.

எடப்பாடி:
நீண்ட நேரமாக செல்போனில் பேசியதை கண்டித்ததால் தொழிலாளியை கத்தியால் குத்திய மனைவி சிறையில் அடைக்கப்பட்டார். 
காதல் திருமணம்
எடப்பாடியை அடுத்த மசையன்தெரு காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 32). தொழிலாளி. கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் இலக்கியா (26). இவர் கோவில் திருவிழாக்களில் மேடை நடனம் ஆடும் பெண்களுக்கு அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் இந்த பணிக்காக எடப்பாடி பகுதிக்கு வந்தபோது, பாலமுருகனுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் வேறு, வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு இலக்கியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இலக்கியா, பாலமுருகனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 7 மாதத்தில் குழந்தை உள்ளது. இதனிடையே தம்பதியினர் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இலக்கியா கோபித்து கொண்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
கணவர் மீது புகார்
இதையடுத்து அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் மீது புகார் அளித்தார். அந்த புகார் எடப்பாடி போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சில நாட்களுக்கு பிறகு பாலமுருகன் ஜாமீனில் வெளியே வந்தார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு இலக்கியா தனது காதல் கணவர் பாலமுருகன் வீட்டுக்கு குழந்தையுடன் வந்தார். அவரிடம், ÔÔநான் போலீஸ் நிலையத்தில் கொடுத்த வழக்கை வாபஸ் பெறுகிறேன், நாம் ஒன்றாக வாழலாம்ÕÕ என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாலமுருகன் தனது மனைவியுடன் சமாதானம் அடைந்து, குடும்பம் நடத்தி வந்தார். 
சிறையில் அடைப்பு
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இலக்கியா செல்போனில் நீண்ட நேரம் பேசி கொண்டிருந்தார். அவர் சிரித்து, சிரித்து பேசி கொண்டிருந்ததால், பாலமுருகன் அவரை கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த இலக்கியா வீட்டில் இருந்த கத்தியால் பாலமுருகனின் நெஞ்சில் குத்தினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். 
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலமுருகனின் தாய் ஜோதி, இலக்கியாவை தடுக்க முயன்றார். அப்போது இலக்கியா அவரை கீழே தள்ளி விட்டதில் காயம் அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து பாலமுருகன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இலக்கியாவை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story