தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 219 ரவுடிகள் கைது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை


தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 219 ரவுடிகள் கைது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
x
தினத்தந்தி 27 Sept 2021 5:56 PM IST (Updated: 27 Sept 2021 5:56 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 219 ரவுடிகள் கைது செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.

திருவள்ளூர்,

தமிழகத்தில் தொடர்ச்சியாக கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதை கட்டுப்படுத்தும் வகையில் அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட போலீசாருக்கு தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும்படி போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.

219 ரவுடிகள் கைது

அதன்பேரில், மாவட்டம் முழுவதும் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய 5 உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் கடந்த 3 நாட்களாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 219 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் ரவுடிகளின் அட்டகாசம் முற்றிலும் ஒழிக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story