குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றம், சூரசம்ஹாரத்துக்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றம், சூரசம்கார நிகழ்ச்சிகளுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றம், சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை, என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் கூறியதாவது:-
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா இந்த ஆண்டு வருகிற 6.10.2021 முதல் 16.10.2021 வரை 11 நாட்கள் நடக்கிறது. இந்த விழாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சத்துக்கு மேல் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதவழிவாட்டுத் தலங்களை திறக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது. அரசின் வழிகாட்டுதலின்படி கோவிலின் உள்ளே மற்ற நாட்களில் பக்தர்கள் வந்து வழிபட எந்த தடையும் இல்லை. அதேபோன்று கோவிலுக்கு வெளிப்புறம் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி இல்லை. எனவே கோவிலுக்குள் வரும் பக்தர்களுக்கு எந்த வழியாக வர வேண்டும், அவர்களை எவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். உரிய சமூக இடைவெளியை பின்பற்றி வழிபாடு மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
அனுமதி இல்லை
இதனால் தசரா திருவிழா கொடியேற்றம் 6.10.21 அன்றும், சூரசம்ஹார நிகழ்ச்சி 15.10.21 அன்றும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் கோவில் வளாகத்துக்குள்ளேயே நடைபெறும். இதில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை.
அதேபோல் 16.10.2021 அன்று திருவிழா முடியும் நாள் அன்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 7, 11, 12, 13, 14-ந் தேதிகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் வர அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்கள் மற்றும் நேரடியாக வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த முறை கடற்கரை பகுதியில் தங்குவது, கடைகள் அமைப்பது போன்ற எதற்கும் அனுமதி இல்லை. மேலும் கடற்கரை பகுதியில் எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்த அனுமதி இல்லை.
அடையாள அட்டை
மேலும் பக்தர்கள் கோவிலுக்கு வழிபாட்டுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அந்த பகுதியில் தங்குவதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. வழக்கமாக திருவிழாவின் போது கிராம பகுதிகளில் உள்ள தசரா குழுக்களுக்கு கொடியேற்றத்திற்கு பிறகு ஒவ்வொரு குழு சார்பாக நிர்வாகிகள் காப்பு எடுத்து செல்லும் நிகழ்வு நடைபெறும். தற்போது பதிவு செய்யப்பட்ட தசரா குழுக்களில் ஒரு குழுவுக்கு ஒரு பிரதிநிதி என்ற வகையில் வந்து தங்கள் குழுவுக்கான காப்பு கயிறுகளை கோவில் அலுவலகத்தில் உரிய அத்தாட்சி கொடுத்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
பதிவு செய்யாத தசரா குழுக்கள் இருப்பின் கோவில் நிர்வாகத்தை உடனடியாக அணுகி 4.10.2021-க்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் கோவில் நிர்வாகத்தின் மூலம் புதிதாக பதிவு செய்தவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு காப்புகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் வேடம் அணிந்து மேளதாளங்களுடன் கோவில் பகுதிக்கு வருகை தர அனுமதி இல்லை. பக்தர்கள் தங்கள் ஊர்களிலேயே காப்பு அணிந்து வேடமிட்டு விரத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு
மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிட வசதி, பாதுகாப்பு வசதிகள், மருத்துவ முகாம்கள், ஆம்புலன்சு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். போலீஸ் துறை சார்பில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் போலீசார் மூலம் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்படும் தற்காலிக கூடாரங்களில் சமூக இடைவெளியில் அமர வைக்கப்பட்டு அங்கிருந்து கோவிலுக்கு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும், பக்தர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், தசரா குழுவினர், இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-------------
Related Tags :
Next Story