புதிதாக எந்த திட்டமும் கொண்டுவரவில்லை: அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் தி.மு.க. மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
புதிதாக எந்த திட்டமும் கொண்டுவராமல், ஏற்கனவே அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டம் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, அர்ஜூணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:-
சட்டம்- ஒழுங்கு சரியில்லை
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று 130 நாட்களில் 202 அறிவிப்புகளை நிறைவேற்றியதாக கூறுகிறார். ஆனால் அவர் தேர்தல் நேரத்தில் கொடுத்த 525 வாக்குறுதிகளில் வெறும் 3, 4 திட்டங்களைத்தான் நிறைவேற்றியுள்ளார், மீதமுள்ள அறிவிப்புகள் வெறும் சாதாரண அறிவிப்புகள்.
தி.மு.க. ஆட்சியில், தனி மனிதனுக்கு பாதுகாப்பு இல்லை, எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் உச்சத்திற்கு போய் கொண்டிருக்கிறது. இன்றைக்கு சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.
தி.மு.க.வை பொறுத்தவரை பொய்யான வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வருவார்கள், அவ்வாறு வந்ததும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் கைவிட்டு விடுவார்கள். ஆனால் அ.தி.மு.க. அரசு, மக்களின் எண்ணங்களை புரிந்து அவர்களுக்காக சேவை செய்கிற அரசு.
பல்கலைக்கழகம்
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அமைச்சர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு நன்மை செய்ய திட்டங்களை கொண்டு வருவார்கள், இங்கிருக்கிற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொள்ளாமலும், இங்குள்ள ஏழை மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளாமலும் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைத்துவிட்ட பெருமை அவரையே சாரும்.
எங்கள் ஆட்சியில் விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.1,500 கோடியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை கொண்டு வந்தோம்.
விழுப்புரம் நகரில் பாழடைந்து கிடந்த குளத்தை சீரமைத்து கொடுத்தோம். விழுப்புரம் நகராட்சியின் வளர்ச்சிக்காக ரூ.50 கோடியில் சிறப்பு திட்டங்களை கொடுத்தோம்.
விழுப்புரத்தில் டைடல் பார்க் ஆரம்பிக்கப்படும் என்று நாங்கள் அறிவித்தோம். அத்திட்டத்தையும் இங்கு செயல்பட விடாமல் புதுச்சேரிக்கு அருகில் கொண்டு சென்று விட்டனர். உணவுப்பூங்கா திட்டத்தையும் நாங்கள் ஏற்கனவே கொண்டு வந்த திட்டம், அதையும் தி.மு.க.வினர், அவர்கள் கொண்டு வந்ததாக கூறுகிறார்கள்.
அரசியல் ஆதாயம்
தி.மு.க.வினர் புதிதாக எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வராமல் நாங்கள் ஏற்கனவே கொண்டு வந்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி அவர்கள் கொண்டு வந்ததாக கூறி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்.
மக்களின் அடிப்படை பிரச்சினைகளை நிறைவேற்றுகிற ஒரே அமைப்பு உள்ளாட்சி அமைப்பு. அப்படிப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறக்கூடிய தேர்தலில் நமது வேட்பாளர்கள் அத்தனை பேரும் வெற்றி பெற வேண்டும். அதற்காக கட்சி நிர்வாகிகள் அயராது பாடுபட வேண்டும்.
தி.மு.க.வுக்கு பயம்
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் தி.மு.க.விற்கு பயம் வந்துவிட்டது. தி.மு.க.வினரை பொறுத்தவரை இந்த தேர்தலில் தில்லுமுல்லு, முறைகேட்டில் ஈடுபடுவார்கள். அதை நாம் முறியடிக்க வேண்டும்.
எந்த தேர்தல் வந்தாலும் அதில் நேரடியாக களம் இறங்கி மக்களை சந்தித்து ஜனநாயக முறைப்படி வெற்றி பெறுவதுதான் அ.தி.மு.க., ஆனால் தி.மு.க.வினர் அப்படி அல்ல. அவர்களிடம் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. எனவே நமது வேட்பாளர்கள் அனைவரும் கவனமாக இருந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் முத்தமிழ்செல்வன், ராமதாஸ், பேட்டை முருகன், சுரேஷ்பாபு, ராஜா, கண்ணன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஷெரீப், அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகவேல், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ராமதாஸ், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் குமரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story