3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 22 இடங்களில் விவசாயிகள் மறியல்


3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 22 இடங்களில் விவசாயிகள் மறியல்
x
தினத்தந்தி 27 Sept 2021 10:37 PM IST (Updated: 27 Sept 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் 22 இடங்களில் விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் 1600-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர், 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்தையொட்டி நாடு முழுவதும் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு விடுத்தனர். அதன்படி நேற்று நாடு முமுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூரில் அண்ணா பாலம் அருகில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் மாதவன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தை அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

இதில் தி.மு.க. தேர்தல் பணிக்குழு இள.புகழேந்தி, நகர செயலாளர் ராஜா, மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் பிரகாஷ், லெட்சுமி செக்யூரிட்டி சர்வீஸ் தினகரன், அரிமா சங்க தலைவர் ராஜா, கூட்டுறவு சங்க தலைவர் ஆதி.பெருமாள், காங்கிரஸ் கட்சி வக்கீல் சந்திரசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், ரவிக் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அமர்நாத், விடுதலை சிறுத்தைகள் கட்சி தாமரைச்செல்வன், நகர செய லாளர் செந்தில், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் அதிகாரம் பாலு தலைமையில் அந்த அமைப்பினர் அண்ணா பாலம் அருகில் மறியல் செய்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் நடத்திய 170 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரும்புகளுடன் ஊர்வலம்

இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் இருந்து கையில் கரும்புகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்துக்கு வட்ட செயலாளர் சுந்தர்ராஜா தலைமை தாங்கினார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் குளோப், நகர செயலாளர் அரிகிருஷ்ணன், மாவட்ட குழு இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 63 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக அவர்கள் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும். 4 தொழிலாளர் நல சட்ட தொகுப்பை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

கைது

இதேபோல் சிதம்பரம் கஞ்சித்தொட்டி முனை, காந்தி சிலை, பி.முட்லூர், கருவேப்பிலங்குறிச்சி, பெண்ணாடம், விருத்தாசலம், நெய்வேலி டவுன்ஷிப், குறிஞ்சிப்பாடி, குமராட்சி, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி, அண்ணாகிராமம், கண்டரக்கோட்டை, அங்கு செட்டிப்பாளையம், புதுப்பேட்டை, காடாம்புலியூர், நெல்லிக்குப்பம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில் உள்பட மொத்தம் 22 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் 1637 போ் கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரிக்கு தனியார் பஸ்கள் ஓடவில்லை

கடலூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தினர். இதையொட்டி கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் அரசு பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் சமூக இடைவெளியின்றி முண்டியடித்துக்கொண்டு ஏறிச்சென்றதை பார்க்க முடிந்தது. ஒரு சில ஆட்டோ, கார்களும் ஓடவில்லை. ஒரு சில கடைகளை தவிர அனைத்து கடைகளும் திறந்து இருந்தது.


Next Story