ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் பலத்த சூறாவளி காற்று
புயல் சின்னம் கரையை கடந்த நிலையில் ராமேசுவரம் தனுஷ்கோடி பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. அரிச்சல்முனை பகுதியில் சாலை வரை கடல் நீர் வந்தது.
ராமேசுவரம்,
புயல் சின்னம் கரையை கடந்த நிலையில் ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. அரிச்சல்முனை பகுதியில் சாலை வரை கடல் நீர் வந்தது.
புயல் சின்னம்
ஒடிசாவில் இருந்து 440 கிலோ மீட்டர் தொலைவிலும் ஆந்தி ராவில் இருந்து 330 கிலோமீட்டர் தொலைவிலும் வங்கக்கடல் பகுதியில் உருவாகி இருந்த குலாப் புயல் ஒடிசா அருகே நேற்றுமுன்தினம் இரவு கரையை கடந்தது. வங்கக் கடலில் உருவாகி இருந்த குலாப் புயல் சின்னம் கரையை கடந்த நிலையில் ராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு முதலே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசத்தொடங்கியது.
இரவு தொடங்கிய காற்றின் வேகம் நேற்று பகல் முழுவதும் இடைவிடாமல் தொடர்ந்து பலத்த சூறாவளி காற்றாக வீசியது. இதேபோல் தனுஷ்கோடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரையிலும் தொடர்ந்து பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் எம்.ஆர். சத்திரம் முதல் கம்பிபாடு அரிச்சல்முனை வரையிலான சாலையில் பல இடங்கள் மணலால் மூடப்பட்டன.
சீறி எழுந்த கடல் அலை
மேலும் தனுஷ்கோடியில் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. எம்.ஆர் சத்திரம் கடற் கரையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் மோதி பல அடி உயரத்துக்கு கடல் அலைகள் ஆக்ரோஷமாக சீறி எழுந்தன.
அரிச்சல்முனை அருகே தடுப்பு சுவரையும் தாண்டி கடல் அலை சாலை வரை சீறி எழுந்தன. இதனால் சாலையில் பல இடங்களில் கடல் நீர் புகுந்து தேங்கி நின்றது.
அரிச்சல்முனை சாலை வழியாக சென்ற இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் மீதும் கடல் அலை வேகமாக மோதியது.
இந்தநிலையில் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் ஏற்றப்பட்டு இருந்த 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று இறக்கப்பட்டது.
Related Tags :
Next Story