நெக்னாமலை கிராமத்திற்கு 8 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குறை கேட்ட கலெக்டர்
வாணியம்பாடி அருகே நெக்னாமலை கிராமத்திற்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா, 8 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குறை கேட்டார்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே நெக்னாமலை கிராமத்திற்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா, 8 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குறை கேட்டார்.
8 கிலோமீட்டர் நடந்து சென்ற கலெக்டர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்தில் நெக்னாமலை கிராமம் உள்ளது. இந்த மலை கிராமத்திற்கு கடந்த ஆட்சியின் போது தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த சாலை கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சாலை முழுவதும் பழுதடைந்து விட்டது. இதனால் மலைப்பகுதிக்கு வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீரென மலைப் பகுதிக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி நேற்று அவர் மலை அடிவாரம் வரை காரில் சென்று விட்டு பின்பு 8 கிலோமீட்டர் தூரம் அதிகாரிகளுடன் நடந்தே சென்று மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டார்.
அடிப்படை வசதிகள்
அங்கு வாழும் மக்களுக்கு பிரதம மந்திரி குடியிருப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 82 நபர்களுக்கு வீடு கட்டுவதற்கும், 80 நபர்களுக்கு தலா ரூ.12,500 வீதம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கழிவறைகள் கட்டுவதற்கும் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தில் சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிடம் உள்ளிட்ட பகுதியை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து கிராமத்தில் வாழும் மலைவாழ் மக்களிடம் தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இங்கு வாழும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
கொரோனா தடுப்பூசி
மேலும் இங்கு வாழும் மக்களுக்கு குளோரின் கலந்த குடிநீர் வழங்கவும், அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதன் அவசியத்தையும், நன்மைகள் குறித்தும் எடுத்துரைக்க ஊராட்சி செயலாளருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் அன்பழகன், ஊராட்சி செயலாளர் ஜீவஜோதி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story