வேலூர் பழைய மீன்மார்க்கெட் வளாகத்தில் உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை
வேலூர் பழைய மீன்மார்க்கெட் வளாகத்தில் உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
வேலூர்
வேலூர் பழைய மீன்மார்க்கெட் வளாகத்தில் உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
பழைய மீன்மார்க்கெட் வளாகம்
வேலூர் நேதாஜி மார்க்கெட் அருகே உள்ள பழைய மீன்மார்க்கெட் வளாகத்தில் கடந்த 2013-14-ம் ஆண்டில் சாலையோர வியாபாரிகளுக்காக 252 தரைக்கடைகள் அமைக்கப்பட்டன. அங்கு மண்டித்தெரு, லாங்குபஜார் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சாலையோர தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டன.
பொதுமக்கள் வருகை தராதது, விற்பனை குறைவு உள்ளிட்ட காரணங்களால் வியாபாரிகள் பழைய மீன்மார்க்கெட் வளாகத்தில் கடைகள் வைப்பதை தவிர்த்தனர். அவர்கள் மீண்டும் ஏற்கனவே கடைகள் வைத்திருந்த மண்டித்தெரு, லாங்குபஜார் உள்ளிட்ட சாலையோரங்களில் வியாபாரம் செய்து வருகிறார்கள். தற்போது பழைய மீன்மார்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகள் எவ்வித பயன்பாடும் இன்றி காணப்படுகிறது.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பழைய மீன்மார்க்கெட் வளாகத்தில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்குள்ள தரைக்கடைகள் மற்றும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பார்வையிட்டார். பின்னர் கலெக்டர், தரைக்கடைகளை வியாபாரிகள் பயன்படுத்தாமல் இருப்பதற்கான காரணம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், வேலூர் மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்காக கட்டப்பட்ட தரைக்கடைகள் சுமார் 5 ஆண்டுகளாக பயன்பாடு இன்றி காணப்படுகிறது. அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
உழவர் சந்தை
நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று மீண்டும் சாலையோர வியாபாரிகள் இங்கு கடைகள் வைக்க அறிவுறுத்தப்படும். இதுதொடர்பாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும். நடைபாதை வியாபாரிகள் இங்கு வராவிட்டால் உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேலூர் நகரில் கூடுதலாக உழவர் சந்தை இருந்தால் பொதுமக்கள், வியாபாரிகள் பயன்பெறுவார்கள்.
வாகனங்கள் நிறுத்தவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். வேளாண்துறை, வேளாண் விற்பனைதுறை அதிகாரிகள் இந்த இடத்தை பார்வையிட்டு உழவர் சந்தை அமைக்கலாம் என்று தெரிவித்தால், அதற்கான பணிகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.
ஆய்வின்போது உதவிகமிஷனர் மதிவாணன், வேலூர் தாசில்தார் செந்தில், சுகாதார அலுவலர் சிவக்குமார், வருவாய் அலுவலர் குமரவேலு மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story