பதவிக்காகபா.ஜ.க.விடம் ரங்கசாமி சரண் நாராயணசாமி தாக்கு


பதவிக்காகபா.ஜ.க.விடம்  ரங்கசாமி சரண் நாராயணசாமி தாக்கு
x
தினத்தந்தி 28 Sept 2021 1:21 AM IST (Updated: 28 Sept 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது பதவிக்காக பா.ஜ.க.விடம் சரணடைந்துவிட்டார் என்று நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி, செப்.28-
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது பதவிக்காக பா.ஜ.க.விடம் சரணடைந்துவிட்டார் என்று நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
100 சதவீதம் வெற்றி
நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களை எதிர்த்து பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. இதற்கு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சிகள் முழுமையான ஆதரவு தந்து இந்தியா முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியுள்ளனர். 
புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. பொதுமக்களும், வியாபாரிகளும் எங்கள் கோரிக்கையை ஏற்று போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்தனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பதவி விலக வேண்டும்
பிரதமர் மோடியின் தவறான அணுகுமுறையால் கொரோனாவுக்கு கோடிக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். நாட்டு மக்கள் தனது கொள்கையை எதிர்க்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முழு அடைப்பு போராட்டத்தினை முன்உதாரணமாக கொண்டு பிரதமர் மோடி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.
பிரதமர் மோடி நியூயார்க்கில் ஐ.நா பொதுக்குழுவில் உண்மைக்கு புறம்பான கருத்தை கூறியுள்ளார். இந்திய நாட்டில் ஜனநாயகம் தழைக்கிறது என்ற கூறியுள்ளார். 
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்தில் இந்தியாவின் சுதந்திரம் காப்பாற்றப்பட்டது. ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் தனி மனித சுந்திரம், மத சுதந்திரம், எழுத்து சுதந்திரம், பேச்சுரிமை எல்லாம் கேள்விக்குறியாகி உள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இந்துத்துவம் என்ற பெயரில் இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் தாக்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் பிரதமர் மோடி உலக நாடுகள் மத்தியில் இந்தியாவில் ஜனநாயகம் தழைத்தோங்குகிறது என்று கூறுகிறார். இது நமக்கு ஏமாற்றத்தை தருகிறது.
சரணாகதி அடைந்துள்ளார்
புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து தொகுதிகளிலும் முன்னணி தலைவர்கள், தொண்டர்கள் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். புதுவையில் கடந்த 5 மாத கால என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் ஆட்சியில் மக்களுக்கு எந்த வித பலனும் கிடைக்கவில்லை. கடந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியில் ஒதுக்கிய நிதியை தற்போது பட்டுவாடா செய்கிறார்கள். 
மாநிலத்திற்கு தேவையான நிதியை முதல்-அமைச்சர் ரங்கசாமி மத்திய அரசிடம் இருந்து பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற முடியாத சூழலில் இந்த ஆட்சி திக்குமுக்காடிக்கொண்டு இருக்கிறது. 
அரசியல் ரீதியாக என்.ஆர்.காஙகிரஸ் பா.ஜ.க.வுக்கு சரணாகதியாகியுள்ளது. எது நடந்தாலும் பரவாயில்லை தனது நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக பா.ஜ.க.விடம் ரங்கசாமி சரணடைந்துள்ளார். கடந்த 5 மாதங்களில் ரங்கசாமியின் ஆட்சியை மக்கள் வெறுத்து விட்டனர். என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. ஆட்சி வெகுவிரைவில் முடிவுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story