காரைக்காலில் கோவில்களில் புகுந்து கொள்ளையடித்த 2 பேர் கைது


காரைக்காலில் கோவில்களில் புகுந்து கொள்ளையடித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Sept 2021 1:21 AM IST (Updated: 28 Sept 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் ஒரே நாள் இரவில் கோவில்களில் புகுந்து கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால், செப்.28-
காரைக்காலில் ஒரே நாள் இரவில் கோவில்களில் புகுந்து கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்களில் கைவரிசை 
காரைக்கால் என்.எஸ்.சி. போஸ் தெரு அருகே, உஜ்ஜைனி காளியம்மன் கோவில் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து உண்டியல், கோவில் பூசாரியின் சைக்கிள் கடந்த 10 நாட்களுக்கு முன் திருடப்பட்டது.
 இதுகுறித்து, கோவில் அறங்காவல் குழு தலைவர் கேசவன் கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபரை தேடி வந்தனர். 
அதேநாள் இரவில் கருக்களாச்சேரி மீனவ கிராமத்தில் உள்ள ஏழை மாரியம்மன் கோவில் மேற்கூரையை அகற்றி, உள்ளே புகுந்த மர்ம நபர்கள், சாமி கழுத்தில் இருந்த தங்ககாசு, வெள்ளி பொருட்கள், உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். 
இதுகுறித்து, நிரவி  போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வந்தனர்.
பிடிபட்டனர்
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, காரைக்கால் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் மதகடி பாலம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக சுற்றிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். 
அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதையடுத்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். இதில் நாகை மாவட்டம் நாகூர் தெற்கு வீதியைச் சேர்ந்த அப்துல் லத்தீப் மகன் ஆசிக் (வயது 24), அவரது நண்பர் கீவளூரைச் சேர்ந்த முத்து (20)  என்பதும், காரைக்கால் உஜ்ஜைனி கோவில், ஏழை மாரியம்மன் ஆகிய கோவில்களில் திருடியதையும், வேறு கோவில்களில் திருடுவதற்காக நோட்டமிட்டு வந்ததும் தெரியவந்தது. 
இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, தங்ககாசு, உண்டியல் மற்றும் ரூ.2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story