‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி
கரூர் மாவட்டம், பெரிய கோதூர் என்.எஸ்.பி. நகரில் உள்ள குடிநீர் குழாயில் சாக்கடை கழிவுநீர் கலந்து வந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி' நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி'க்கும், அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
குணசேகரன், பெரிய கோதூர், கரூர்.
குளம்போல் காட்சியளிக்கும் சாலை
திருச்சி மேலகல்கண்டார்கோட்டை, மாருதி நகர், 5-வது தெருவில் சிறிது நேரம் பெய்யும் மழைக்கே தாக்குப்பிடிக்காமல் குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் முதியவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரண், திருச்சி.
வாகன ஓட்டிகள் அவதி
திருச்சி மாவட்டம், காட்டூர் மஞ்சத்திடல் பாலம் முதல் ரெயில்வே கேட் வரை சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சாலையின் இருபுறத்திலும் கருவேல மரங்கள் நிறைந்துள்ளது. தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் அந்த வழியே செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காட்டூர், திருச்சி.
அபாயகரமான குடிநீர் தொட்டி
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் குடிநீருக்காக பயன்படுத்தப்படும் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி மிகவும் பழுதடைந்து அபாயகரமான நிலையில் உள்ளது. இதன் அருகில் மத்திய கூட்டுறவு வங்கி உள்ளது. வங்கிக்கு மக்கள் அதிகமாக வருகின்றனர். இதனால் எந்த நேரத்திலும் அந்த தொட்டி இடிந்து விழும் சூழ்நிலையில் உள்ளது. எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சவுந்தரராஜன், அரியலூர்.
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
பெரம்பலூர் மாவட்டம் ரோஸ் நகர் பகுதியையும் ரோவர் சாலையையும் இணைக்கும் பிரதான சாலையில் பாதாள சாக்கடை உள்ளது. இந்த சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகராணி, பெரம்பலூர்.
கழிவுநீர் வடிகால் சேதம்
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள குளத்தூர் கீழத்தெருவில் உள்ள கழிவுநீர் வடிகால் சேதமடைந்து உள்ளது. இதனால் கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கழிவுநீர் வடிகாலை சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள்,புதுக்கோட்டை
கரூருக்கு பஸ் இயக்கப்படுமா?
புதுக்கோட்டை இருந்து அன்னவாசல், இலுப்பூர், விராலிமலை, மணப்பாறை, தோகைமலை, குளித்தலை வழியாக கரூருக்கு காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் அரசு பஸ் இயக்க வேண்டும்.
ராமன், ராஜாளிப்பட்டி.
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி
திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா, கல்லுப்பட்டியில் திருச்சி- மதுரை நெடுஞ்சாலையில் இருந்து அங்கன்வாடி குடியிருப்பு பகுதிவரையிலான 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்சாலை அமைக்கும் பணி கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலை பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
கல்லைவெங்கட், திருச்சி
குடிநீர் குழாயில் உடைப்பு
திருச்சி தென்னூர் சாலையில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வீணாக செல்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.
பொதுமக்கள், திருச்சி.
சேறும், சகதியுமான சாலை
திருச்சி 36-வது வட்டம் கொட்டப்பட்டு ஜீவா பிரதான சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் சேறும் சகதியுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் இந்த தெருவில் முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது, மேலும் வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்த முடியாத அவல நிலையில் உள்ளது, எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாண்டியன், திருச்சி.
Related Tags :
Next Story