தொழிற்சங்கத்தினர் மறியல்; 289 பேர் கைது


தொழிற்சங்கத்தினர் மறியல்; 289 பேர் கைது
x
தினத்தந்தி 28 Sept 2021 1:27 AM IST (Updated: 28 Sept 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் மறியல் போராட்டம் நடத்திய தொழிற்சங்கத்தினர் 289 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நெல்லையில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 289 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேளாண் சட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை கண்டித்தும், அந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாடு முழுவதும் பல்வேறு விவசாய அமைப்பினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள.
நெல்லை மாவட்டத்தில் இந்த வேளாண் சட்டங்களை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை வண்ணார்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டு அதன் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு தொ.மு.ச. பொதுச்செயலாளர் தர்மன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன், சி.ஐ.டி.யு. மாவட்ட பொதுச்செயலாளர் மோகன் விவசாயிகள் சங்க மாநில செயலாளர் பெரும்படையார், எச்.எம்.எஸ். நிர்வாகி சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் முத்துவளவன், ஐ.என்.டி.யூ.சி. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

289 பேர் கைது

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் பாலச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் திருப்பதி, ஜெகதா, சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 186 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இதேபோல் நெல்லை மாவட்டம் வள்ளியூரில் மறியலில் ஈடுபட்ட 30 பேரையும், அம்பையில் 53 பேரையும், களக்காட்டில் 20 பேரையும் போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 289 பேரை போலீசார் கைது செய்தனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்

மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மற்றும் எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கத்தினர் வேளாண் சட்டங்களை கண்டித்து மறியல் போராட்டம் நடத்தினர். எஸ்.டி.பி.ஐ. நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தலைமை தாங்கினார்.  துணைதலைவர் கனி, மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன், பொருளாளர் ஆரிப் பாட்ஷா, செயற்குழு உறுப்பினர் காதர், தொகுதி செயலாளர் பாளை. சிந்தா, தொழிற்சங்க அணி மாவட்ட தலைவர் சலீம்தீன், செயலாளர் செய்யது, துணை தலைவர் கல்வத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story