வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி 16 இடங்களில் சாலை மறியல் 378 பெண்கள் உள்பட 1,181 பேர் கைது
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி சேலம் மாவட்டத்தில் 16 இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 378 பெண்கள் உள்பட 1,181 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்,
சாலை மறியல்
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நேற்று விவசாய சங்கங்கள் இணைந்த சம்யுக்தா மோர்ச்சா சார்பில் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் பல இடங்களில் சாலை மறியல், கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை நடைபெற்றன.
அதன்படி, சேலம் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு எல்.பி.எப்., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.சி.சி.டி.யூ. ஆகிய தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
661 பேர் கைது
இதையடுத்து தலைமை தபால் நிலையம் முன்பு தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரியும், பொதுத்துறை சொத்துகளை தனியாருக்கு விற்க கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் கோஷமிட்டனர். அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 287 பெண்கள் உள்பட 661 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள 3 திருமண மண்டபங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் ஏராளமானவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 19 பெண்கள் உள்பட 47 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மறியலினால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டம்
இதேபோல் அயோத்தியாப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ராஜா தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. உடனே மறியலில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே புரட்சிகர சோசலிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
13 இடங்களில்....
விவசாய சங்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி விவசாய சங்கங்களுக்கு ஆதரவாக மாவட்டத்தில் கொங்கணாபுரம், சங்ககிரி, ஆத்தூர் டவுன், தலைவாசல், தம்மம்பட்டி, மேட்டூர், மேச்சேரி, ஓமலூர், ஜலகண்டாபுரம், வாழப்பாடி, ஏத்தாப்பூர், புத்திரகவுண்டம்பாளையம், கருமந்துறை ஆகிய 13 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட 71 பெண்கள் உள்பட 447 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாநகர் மற்றும் புறநகரில் மொத்தம் 16 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட 378 பெண்கள் உள்பட 1,181 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story