பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.3,500 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது
பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.3 ஆயிரத்து 500 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பனமரத்துப்பட்டி
பட்டா பெயர் மாற்றம்
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள பெத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாமியப்பன். இவருடைய மகன் செல்வகுமார் (வயது 30), விவசாயி. இவருடைய தாத்தா கந்தசாமி பெயரில் உள்ள நிலத்தை தனது தந்தை சாமியப்பன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக ஏர்வாடி வாணியம்பாடி கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமியிடம் (30) விண்ணப்பித்தார்.
அப்போது விஜயலட்சுமி, பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.3 ஆயிரத்து 500 லஞ்சம் தர வேண்டும் என்று அவரிடம் கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார் இது குறித்து நேற்று சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
2 பேர் கைது
இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் நேற்று மதியம் ஏர்வாடிவாணியம்பாடி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு செல்வகுமார், ரசாயன பவுடர் தடவிய ரூ.3 ஆயிரத்து 500-ஐ விஜயலட்சுமியிடம் லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி, அவரது உதவியாளர் உதயகுமார் ஆகிய 2 பேரையும் கையும்,களவுமாக பிடித்து கைது செய்தனர். ரூ.3 ஆயிரத்து 500 லஞ்சம் வாங்கியதாக பெண் கிராம நிர்வாக அலுவலர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story