பெங்களூருவில் 47 ஆண்டுகள் பழமையான 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக 30 தொழிலாளர்கள் உயிர் தப்பினர்.
பெங்களூருவில் 47 ஆண்டுகள் பழமையான 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக 30 தொழிலாளர்கள் உயிர் தப்பினர்.
பெங்களூரு: பெங்களூருவில் 47 ஆண்டுகள் பழமையான 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக 30 தொழிலாளர்கள் உயிர் தப்பினர்.
பழமையான கட்டிடம்
பெங்களூரு வில்சன்கார்டன் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட லக்கசந்திரா 7-வது மெயின் ரோடு, 14-வது கிராசில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பழமையான வீடு உள்ளது. அந்த வீடு 3 மாடிகளை கொண்டதாகும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே அந்த வீட்டின் ஒரு பகுதி சிறிதளவு சரிந்தது.
இதன் காரணமாக முன் எச்சரிக்கையாக அந்த வீட்டில் வசித்தவர்கள், வேறு வீட்டுக்கு சென்றிருந்தனர். வாடகைக்கு யாரும் குடியிருக்காமல் இருந்தனர்.
இதற்கிடையில், மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் அந்த வீட்டில் தங்கி இருந்தனர். இந்த நிலையில், நேற்று காலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார்கள். அதே நேரத்தில் 3 மாடி வீடு நேற்று மீண்டும் சரிய தொடங்கியது. இதை பார்த்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வீடு இடிந்து விழுந்தது
இந்த நிலையில், தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே திடீரென்று 3 மாடி வீடு முற்றிலும் இடிந்து விழுந்து தரை மட்டமானது. அந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததாலும், வீட்டிற்குள் யாரும் இல்லாத காரணத்தாலும் எந்த விதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை. எந்த ஒரு நபருக்கும் காயமும் ஏற்படவில்லை. இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படைவீரர்கள், வில்சன்கார்டன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினாா்கள்.
அப்போது அந்த வீடு கடந்த 1974-ம் ஆண்டு கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. பழமையான வீடு என்பதால், 2 ஆண்டுகளுக்கு முன்பே வீட்டின் ஒரு பகுதி ஒருபுறமாக சரிந்துள்ளது. இதன் காரணமாக அங்கு வசித்தவர்கள் வீட்டை காலி செய்திருந்தனர். மெட்ரோ தொழிலாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் அங்கு தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களும் நேற்று காலையில் வேலைக்கு சென்று விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பித்து இருந்தனர்.
உரிமையாளர் தலைமறைவு
அதே நேரத்தில் சரிந்து விழும் நிலையில் உள்ள வீட்டை இடித்து அகற்றும்படி உரிமையாளர் சுரேசுக்கு, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கூறி வந்ததாகவும், ஆனால் அவர் கண்டு கொள்ளாமல் இருந்ததாகவும், அதனால் திடீரென்று இடிந்து விழுந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே நேரத்தில் சம்பவ இடத்தை மாநகராட்சி இணை கமிஷனர் வீரபத்ரய்யாவும் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். 3 மாடி வீடு இடிந்து விழுந்ததில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், இடிபாடுகள் விரைவில் அகற்றப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து வில்சன்கார்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டு உரிமையாளர் சுரேஷ் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story