கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நரிக்குறவர்கள் தர்ணா


கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நரிக்குறவர்கள் தர்ணா
x
தினத்தந்தி 27 Sep 2021 9:09 PM GMT (Updated: 27 Sep 2021 9:09 PM GMT)

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நரிக்குறவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்:

உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூர் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்கள் அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்காமல், சிலரை மட்டும் கலெக்டரிடம் மனு அளிக்க செல்வதற்கு அனுமதிப்பதாக கூறினர். இதனால் நரிக்குறவர்கள் உள்ளே செல்லாமல் கலெக்டர் அலுவலகத்தின் வெளியே சாலையோரத்தில் அமர்ந்து மதியம் வரை காத்திருந்தனர்.
இந்நிலையில் மதியம் 2 மணியளவில் திடீரென்று நரிக்குறவர்கள் தங்களது விவசாய நிலங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கலெக்டர் வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்துக்குள் அனைவரும் செல்ல முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் கதவுகளை பூட்டி, அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த நரிக்குறவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, அதன் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயம் செய்ய ஒதுக்கப்பட்ட நிலம்
அப்போது அவர்கள் கூறியதாவது:-
எறையூரில் 120 நரிக்குறவர்கள் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். 46 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த மாவட்டமாக திருச்சி இருந்தபோது, அப்போதைய கலெக்டர் எங்களுக்கு எறையூர் பகுதியில் விவசாயம் செய்ய ஒரு குடும்பத்தினருக்கு தலா 2 ஏக்கர் முதல் 2½ ஏக்கர் வரையிலான நிலங்களை ஒதுக்கி கொடுத்தார்.
ஆனால் இதுவரை அந்த நிலங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாங்கள் பலமுறை மனு கொடுத்தோம். இன்னும் பட்டா வழங்குவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. ஆனாலும் நாங்கள் அந்த நிலங்களில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வந்தோம். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த நிலங்களை நாங்கள் விவசாயம் செய்வதற்காக டிராக்டரை கொண்டு உழவு செய்தபோது வருவாய்த்துறையினர் தடுத்ததால், தற்போது விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம். இதனால் அந்த விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும், தற்போது விவசாயம் செய்ய அனுமதிக்கக்கோரியும் கடந்த 13-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கலெக்டர் அந்த விவசாய நிலத்தை பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
பட்டா வழங்க வேண்டும்
ஆனால் நிலத்தை பார்வையிட கலெக்டர் வரவில்லை. வருவாய் கோட்டாட்சியர் வந்தார். ஆனால் அவரும் எந்த முடிவும் தெரிவிக்காமல் சென்று விட்டார். அதன் பிறகும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதனால் கலெக்டர் அந்த நிலங்களில் எங்களை விவசாயம் செய்ய உடனடியாக அனுமதிக்கவும், அந்த நிலங்களுக்கு பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் அவா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களுக்கு பட்டா வழங்க கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கிய பிரகாசம் தலைமையில் பெரம்பலூர் சரக துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கலெக்டர் உறுதி
ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த கலெக்டர் ஸ்ரீவெங்டபிரியா இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரியிடம் கூறியதை, போலீசார் போராட்டக்காரர்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து, அவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு சாலையோரமாக அமர்ந்தனர். பின்னர் மாலையில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, போராட்டக்காரர்களை செல்போனில் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களில் தற்காலிகமாக விவசாயம் செய்து கொள்ள அனுமதி அளித்தார். பட்டா வழங்குவதற்கு அரசு தரப்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
தள்ளுமுள்ளு
நாிக்குறவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர போலீசார் எவ்வளவோ போராடியும் முடியவில்லை. ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

Next Story