100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் மாற்று இடத்தில் நடப்பட்டது
100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நடப்பட்டது.
கீழப்பழுவூர்:
சாலை விரிவாக்கத்திற்காக...
பெரம்பலூர் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்கள், குறுகிய இடங்கள் கண்டறியப்பட்டு தற்போது அப்பகுதிகளில் விரிவாக்கம் செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதிகளில் உள்ள புளியமரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றிய அலுவலகம் அருகே நந்தியாறு வாய்க்காலின் வடகரையில் சுமார் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த, அரசமரம் சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்படும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, மரத்தின் கிளைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதனை கண்ட சமூக ஆர்வலர்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி, மரத்தின் அடிப்பகுதியை வேருடன் அகற்றி, மாற்று இடத்தில் வைக்க கேட்டனர்.
கொள்ளிடக்கரையில் நடப்பட்டது
இதைத்தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சேதுபதி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் ஒப்புதலுடன் எந்திரங்கள் கொண்டு, ஆலமரம் வேருடன் அகற்றப்பட்டு, ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு கொள்ளிடத்தின் கரைப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை நடப்பட்டது. இதனை கண்ட அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்களுக்கும், தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கும் நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story