புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Sept 2021 6:07 AM IST (Updated: 28 Sept 2021 6:07 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டங்கள்
விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் விதமாக மத்திய அரசு கொண்டு வந்ததாக 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி-சித்தூர் சாலையில் கமலா திரையரங்கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், சி.ஐ.டி.யூ. ஆட்டோ, கரும்பு விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர், தி.மு.க. தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கலந்து கொண்டனர்.அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக ரெயில் நிலையம் நோக்கி சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரெயில் மறியல் முயற்சி
அப்போது ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற அவர்களை ரெயில்வே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றினார்கள்.அவர்கள் அனைவரையும் ரெயில் நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த போராட்டத்தில் 45 பெண்கள் உட்பட மொத்தம் 150 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

திருவள்ளூர்
அதே போல், திருவள்ளூரில் மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் ராஜேந்திரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் திருவள்ளூர்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உழவர் சந்தை அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அப்போது அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்த போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 55 பேரை கைது செய்து, திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் திராவிட பக்தன், மாநில விவசாய பிரிவு செயலாளர் ஆதிசேஷன், மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்டு கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் கம்யூனிஸ்டு கட்சி அதனை சேர்ந்த கூட்டணி கட்சிகள் மற்றும் விவசாய சங்க போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை கும்மிடிப்பூண்டி தி.மு.க. எம்.எல்.ஏ.,டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்து கொண்டார்.இதன் பின்னர் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்ற போராட்ட குழுவினர் ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்காததால் அங்கு போலீசாருக்கும் போராட்ட குழுவினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து ரெயில் நிலையம் முன்பாக அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 29 பெண்கள் உள்பட 116 பேரை போலீசார் கைது செய்தனர்.விவசாயிகளுக்கு விரோதமாக இயற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் அனைத்து விவசாய சங்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் கூட்டணி கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டம் உள்ளிட்டவை நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட விவசாய சங்க தலைவர் ஜி.சம்பத் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர்.

Next Story